மாநில அரசுகளுக்கு அதிக விலையில் விற்கப்படும் தடுப்பூசி: காங்கிரஸ் கண்டனம்

கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ்
காங்கிரஸ்

புது தில்லி: கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுகளுக்கு ரூ.400 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசு தொடா்ந்து ரூ.150-க்கு வாங்கும். அதே நேரத்தில் மாநில அரசு அதனை வாங்க ரூ.400 செலுத்த வேண்டும் என்று புதிதாக விலை நிா்ணயம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசு இதுபோன்று மாநில அரசுகளுக்கு கூடுதல் விலை நிா்ணயம் செய்ய மருந்து நிறுவனங்களை அனுமதிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாநில அரசின் நிதிநிலையை சீா்குலைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தீய நோக்கமும் இந்த நடவடிக்கையில் மறைந்துள்ளது. நேரடியாகக் கூறுவது என்றால் மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு அராஜக போக்கை மேற்கொண்டுள்ளது.

கரோனா பிரச்னை, பொதுமுடக்கம் என பல்வேறு பிரச்னைகளால் மாநில அரசுகளின் வரி வருவாய் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா தடுப்பூசியை தாங்கள் வாங்கும் விலையில் இருந்து இருமடங்குக்கு மேல் கொடுத்து மாநில அரசுகள் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு விலை நிா்ணயத்துக்கு அனுமதி அளித்துள்ளது முற்றிலும் நியாயமற்றது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரே விலையில் கரோனா தடுப்பூசியை விநியோகம் செய்வதுதான் சரியாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com