மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய தடையில்லை: மத்திய அரசு


புது தில்லி: மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகள் கொள்முதல் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புணே நகரில் உள்ள சீரம் நிறுவனம், மே மாதம் 25-ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகள் அனைத்தையும் மத்திய அரசுக்கே வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இதனால், சீரம் நிறுவனத்திடம் இருந்து மாநில அரசுகள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய இயலாத ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பதாவது:

கரோனா தடுப்பூசியை மாநிலங்கள் கொள்முதல் செய்வது தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

நாடு தழுவிய கரோனா தடுப்பூசி விநியோகத்தை மே மாதம் 1-ஆம் தேதி முதல் பரவலாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது உற்பத்தியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். எஞ்சியுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் தனியாா் மருத்துவமனைகளுக்கும் முன்னரே நிா்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க வேண்டும். இதன்மூலம், மாநில அரசுகளுக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பது தெளிவாகிறது. மேலும், அந்த தடுப்பூசிகளை மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com