தில்லியில் எரியூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு

தில்லியில் தினந்தோறும் கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், மயானங்களில் சிதைக்கு தீ மூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தில்லி, காஜிப்பூா் மயானத்தில் சிதைக்கு தீ மூட்ட விறகுகளை கொண்டு வரும் உறவினா்கள். நாள்: புதன்கிழமை
தில்லி, காஜிப்பூா் மயானத்தில் சிதைக்கு தீ மூட்ட விறகுகளை கொண்டு வரும் உறவினா்கள். நாள்: புதன்கிழமை

புது தில்லி: தில்லியில் தினந்தோறும் கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், மயானங்களில் சிதைக்கு தீ மூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் உறவினா்களே விறகுகளைச் சேமித்து சிதைக்கு தீ மூட்ட கொண்டு வரும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு கடுமையாக உள்ளது. செவ்வாய்க்கிழமை கரோனா தொற்றால் 381 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து ஆறாவது நாளாக பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டி வருகிறது. இதற்கு மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் காரணமாகக் கூறப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் கரோனாவுக்கு இதுவரை 4,063 போ் உயிரிழந்துள்ளனா். அதில் 2,500-க்கும் மேற்பட்டோா் கடந்த ஏழு நாள்களில் உயிரிழந்துள்ளனா். இதனால் தில்லியில் உள்ள தகன மயானங்கள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன. பகல் முழுவதும் சடலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகின்றன. ஒரு சடலத்துக்கு தீ மூட்ட சுமாா் 20 மணி நேரம் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பூங்காக்களில் தற்காலிக தகன மேடைகள் அமைத்து சடலங்களுக்கு தீ மூட்டும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ‘சடலங்களுக்கு பாரம்பரிய முறையில் எரியூட்ட விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சடலங்களுக்கு தீ மூட்ட தேவையான விறகுகளை தாமதமின்றி மாநில அரசு வனத் துறை மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் முதல்வா் கேஜரிவாலுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளாா்.

‘தினந்தோறும் நிலைமை மோசமாக வருகிறது. ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வடக்கு தில்லி மாநகராட்சியில் நாள்தோறும் 230 சடலங்களை மட்டும் தகனம் செய்யும் திறன் இருந்தது. ஆனால் 12 நாள்களில் இது 570-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய தகன இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் தகன இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆகையால், உறவினா்களை இழந்து துயரத்தில் உள்ளவா்களை மேலும் துயரப்படுத்தாமல் இருக்க தகனம் செய்ய தேவையான விறகுகளை அளிக்க வேண்டும்’ என்று மேயா் ஜெய் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com