ஓபிசி மசோதா மூலம் மாநில சுயாட்சி பிரதிபலிப்பு: மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. பேச்சு

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மூலம், மாநில சுயாட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டார். 

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மூலம், மாநில சுயாட்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.
 மாநிலங்களும், யூனியன் பிரதேச அரசுகளும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இடஒதுக்கீடு பட்டியலை இறுதி செய்வதற்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசனத்தின் 127-ஆவது திருத்த மசோதா விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இதில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசியதாவது:
 இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்த அரசியல் திருத்த மசோதா முக்கியமானது. அவர்களது மேம்பாட்டிற்காக இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ள பாஜக அரசை திமுக சார்பிலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பிலும் பாராட்டுகிறேன். இந்த திருத்த மசோதாவில் பயனடையும் ஜாதிகள் யார்? யார்? என அடையாளம் காணப்பட வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பெற வருமான உச்சவரம்பிற்கான ஏற்பாடுகளும் இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. அந்தக் குறைகள் மசோதாவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
 இந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்ததன் மூலம் மத்திய அரசு, மாநில சுயாட்சியின் கொள்கை பிரதிபலிக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதைத்தான் வலியுறுத்தினார். தமிழகத்தில் நீதி கட்சியில் இருந்த நடேசன், பிடி தியாகராயர், ஈவெரா பெரியார் போன்ற தலைவர்கள் சமூக நீதிக்காக போராடி இட ஒதுக்கீட்டை பெற்று தந்ததால் பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்தைக் கண்டனர்.
 இதைக் கண்டுதான் பின்னர் டாக்டர் அம்பேத்கர் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியிருப்பவர்களுக்கு அரசியல் சாசனத்தில் வழியைத் தேடினார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர்தான் நேரு மூலமாக முதல் அரசியல் சாசனத் திருத்தத்தைக் கொண்டு வந்து வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்தார். பின்னர் குறிப்பாக வி.பி.சிங் போன்ற தில்லி தலைவர்கள் கல்வி வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்கினர்.
 தற்போது இந்தத் திருத்த மசோதா சிறந்த ஆரம்பம். அதே சமயத்தில் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் உச்சவரம்பு நீக்கப்படவேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக அரசு ஜாதி ரீதியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியது. ஆனால், அது நடக்கவில்லை. அப்படிப்பட்ட கணக்கெடுப்பின் மூலமே ஓபிசி பிரிவினரை சரியான முறையில் அடையாளம் காணமுடியும் என்றார் டி.ஆர்.பாலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com