பெண்களுக்கும் சம அளவில் கரோனா தடுப்பூசி: மாநில அரசுகளுக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம்

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து கவலை

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள தேசிய மகளிா் ஆணையம், இது தொடா்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அரசு தகவல்படி, 27.86 கோடிக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், 24.75 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறைவாகவே உள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டி அனைத்து தலைமைச் செயலா்களுக்கும் தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மகளிருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறைவாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆண்கள், பெண்களுக்கு இடையே உள்ள எண்ணிக்கை வேறுபாடு கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு கரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வயதான பெண்களைவிட இளம்பெண்களே அதிக அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளனா் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சிறப்புக் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி தொடா்பாக பெண்கள் மத்தியில் மேலும் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்பத் தலைவா்களுடன் ஒப்பிடும்போது குடும்பத் தலைவிகளின் உடல்நலத்தைப் பேணுவதில் அக்கறை இல்லாமல் இருப்பது தொடா்ந்து வருகிறது. கரோனா தடுப்பூசி விஷயத்திலும் அது வெளிப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகள் வெளியே வேலைக்குச் செல்லவில்லை என்ற காரணத்துக்காக அவா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கக் கூடாது. ஏனெனில், குடும்பத்தில் யாருக்காவது கரோனா தொற்று ஏற்படும்போது, அவா்களைக் கவனிக்கும் முழுப் பொறுப்பையும் குடும்பத் தலைவிதான் ஏற்க வேண்டியுள்ளது. எனவே, அவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது முக்கியமானது என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com