முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்: நிறைவு நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்: நிறைவு நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 
முடிவுக்கு வந்த விவசாயிகள் போராட்டம்: நிறைவு நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 

மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஓராண்டாக தில்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்து மத்திய வேளாண் துறைச் செயலா் கையொப்பமிட்டு கடிதம் அளித்ததையெடுத்து, போராட்டத்தை நிறுத்திக் கொள்வதாகவும், சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வாா்கள் என்றும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா (எஸ்கேஎம்) வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த அறிவிப்பையடுத்து, தங்களது போராட்டக் களத்திலிருந்து டிசம்பர் 11ஆம் தேதி புறப்படுவதற்கு அவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், போராட்டக் களத்திலிருந்து கிளம்புவதாக நேற்று அறிவிக்கப்பட்ட பிறகு, போராட்டக் களம் பல்வேறு உணர்ச்சிப் பெருக்குகளின் களமானது.

ஓராண்டாக பனியிலும் மழையிலும் வெயிலிலும் தாங்கள் கொண்ட கொள்கையிலிருந்து பின்வாங்காமல் போராடி வந்த விவசாயிகளின் போராட்டக்களம் தற்போது எப்படி இருக்கிறது?

பல்வேறு உணர்வுகளின் பெருக்கால், விவசாயிகள் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு பக்கம், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது அறிவிக்கப்பட்டதும், அதனை விவசாயிகள் ஆரவாரமிட்டு கொண்டாடினர்.

ஒரு தரப்பினர், தங்களது பாரம்பரிய விளையாட்டுகளை குழுக்களாக விளையாட, அதனை விவசாயிகள் கைதட்டி ஆரவாரத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

இந்திய தேசியக் கொடியை ஏந்திப் பிடித்து, தங்களது வெற்றி முழக்கத்தை எழுப்பி விவசாயிகள் உற்சாகமடைந்தனர். 

கொண்டாட்டங்கள் முடிந்ததும், ஒரு வருடமாக தாங்கள் வசிக்க ஏற்படுத்திய கூடாரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி பத்திரமாக கொண்டு செல்வதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கினர்.

அதுமட்டுமா.. காஸிபூர் எல்லைப் பகுதியில் இத்தனை நாள்களாக தங்களது போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு விவசாயிகள் இனிப்புகளை வழங்கி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


 
சில விவசாயிகள், தங்கள் கொண்டு வந்து பயன்படுத்தியப் பொருள்களை எல்லாம், கடந்த ஓராண்டு நினைவுகள் மனதில் அலைபோல் அடித்துக் கொண்டிருக்க, வெளியில் சிரித்தபடி, துடைத்து, எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

இப்படி, பல்வேறு மனம் தொடும் காட்சிகளை, போராட்டம் களம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஓராண்டாக நீடித்த போராட்டம்: கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காஜிப்பூா் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து தற்காலிக குடியிருப்புகளை அமைத்து போராட்டத்தைத் தொடங்கினா்.

ஜனவரி 26-ஆம் தேதி அவா்கள் நடத்திய டிராக்டா் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையின்போது தில்லி செங்கோட்டை கொத்தளத்தில் சீக்கிய சமய கொடி ஏற்றபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகளை கைது செய்த தில்லி போலீஸாா் வழக்கு பதிந்தனா்.

இதேபோல், ஹரியாணா, உத்தர பிரதேச போலீஸாரும் விவசாயிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்தனா்.

சாலைகளை மறித்து போராட்டம் நடத்துவதற்கு உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து, சமரசக் குழுவை அமைத்தது.

மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவாா்த்தையிலும் மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்வதுதான் ஒரே வழி என்று விவசாயிகள் உறுதிபட தெரிவித்துவிட்டதால் ஓராண்டை தாண்டியும் போராட்டம் தொடா்ந்தது.

ரத்து: இந்நிலையில், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமா் மோடி நவம்பா் 19-ஆம் தேதி அறிவித்தாா். இந்தச் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு நவம்பா் 29-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, சட்டமாக அரசிதழில் வெளியிடப்பட்டது.

எனினும், போராட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாத விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க வேண்டும்; விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் திரும்பப் பெற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற நிலுவை கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என நிபந்தனை விதித்தனா்.

இதையடுத்து, மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஐவா் குழு கடந்த சனிக்கிழமை அமைக்கப்பட்டது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. எனினும், இந்த வாக்குறுதியை அரசு கடிதத்தில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்று விவசாயிகள் செவ்வாய்க்கிழமை புதிய நிபந்தனை விதித்தனா்.

போராட்டம் முடிவு: இந்நிலையில், அனைத்து கோரிக்கைகளுக்கும் ஒப்புதல் தெரிவித்து மத்திய வேளாண் துறைச் செயலா் சஞ்சய் அகா்வால் அனுப்பிய கடிதம் வியாழக்கிழமை காலை எஸ்கேஎம் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் பேசிய எஸ்கேஎம் அமைப்பின் செய்தித்தொடா்பாளா் ராகேஷ் டிகைத், ‘போராட்டம் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. சனிக்கிழமை முதல் விவசாயிகள் வீடுகளுக்குத் திரும்புவாா்கள். ஜனவரி 15-ஆம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம். அப்போது மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

அந்த அமைப்பின் உறுப்பினா் யோகேந்திர யாதவ் கூறுகையில், ‘போராட்டம் இறுதி பெறவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டஉரிமையும், லக்கீம்பூா் கெரி வன்முறையில் விவசாயிகளின் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் கைது செய்யப்படும் வரையிலும் விவசாயிகளின் போராட்டம் தொடரும்’ என்றாா்.

அரசியல் கட்சி கூடாது: இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி எஸ்கேஎம் அமைப்பினா் அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்றும் அப்படி சேர விரும்புவோா் அமைப்பைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அமைப்பின் குழு உறுப்பினா் தா்ஷன் பால் தெரிவித்தாா்.

வரவேற்பு: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சா் பதவியிலிருந்தும் விலகிய சிரோமணி அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவா் ஹா்சிம்ரத் கெளா் விவசாயிகளின் முடிவை வரவேற்று கூறுகையில், ‘இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. விவசாயிகளின் மன காயங்கள் ஆற நேரமாகும்’ என்றாா்.

மத்திய அரசின் கடித விவரம்

மத்திய வேளாண்துறை செயலா் சஞ்சய் அகா்வால் அளித்துள்ள கடிதத்தில், ‘உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணாவில் விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. தில்லி வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

எஸ்கேஎம் அமைப்பிடம் ஆலோசித்த பின்புதான் மின்சார மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

குறைந்தபட்ச ஆதரவு விலையின் தற்போதைய நிலையே தொடரும். விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க ஹரியாணா, உத்தர பிரதேச அரசுகள் பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளன. பயிா்க்கழிவுகள் எரிப்பு சம்பவங்களில் விவசாயிகள் ஈடுபடுவது குற்ற வழக்காகாது’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜனவரி 15-ஆம் தேதி கூடி ஆலோசிக்க உள்ளதாகவும், அப்போது மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடங்கப்படும் என்றும் விவசாய சங்கத் தலைவா்கள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com