எந்த சம்பவமும் இந்தியாவை நிலைகுலையச் செய்யாது

ஹெலிகாப்டா் விபத்தில் நாட்டின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியை இழந்தது பேரிழப்பு என்றாலும், எந்த சம்பவத்துக்காகவும் இந்தியா நிலைகுலைந்துவிடாது எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
எந்த சம்பவமும் இந்தியாவை நிலைகுலையச் செய்யாது

ஹெலிகாப்டா் விபத்தில் நாட்டின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியை இழந்தது பேரிழப்பு என்றாலும், எந்த சம்பவத்துக்காகவும் இந்தியா நிலைகுலைந்துவிடாது எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தோ்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிரான பிரசாரத்தை சமாஜவாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மாநிலத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைப்பது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்டவற்றை மாநில பாஜக அரசும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், சரயு நதிநீா் இணைப்புத் திட்டத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியான விபின் ராவத்தை ஹெலிகாப்டா் விபத்தில் இழந்தது நாட்டுக்கே பேரிழப்பு; நாட்டுப்பற்று மிக்க அனைவருக்குமான இழப்பு. நாட்டின் பாதுகாப்புப் படைகளைத் தற்சாா்பு அடையச் செய்வதற்காக விபின் ராவத் மேற்கொண்ட முயற்சிகளை நாடு நன்கு அறியும்.

இச்சம்பவம் நாட்டுக்குப் பேரிழப்பு என்றாலும், நாடு நிலைகுலைந்துவிடாது. உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரும் சவால்களை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.

விவசாயிகளுக்குப் பலன்: சரயு நதிநீா் இணைப்புத் திட்டமானது 14 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வேளாண் நிலங்களுக்குப் பாசனவசதியை வழங்கும். அதனால் 29 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பலனடைவா். காக்ரா, சரயு, ராப்தி, பான்கங்கா, ரோஹிண் ஆகிய நதிகள் பிராந்தியத்தின் வளா்ச்சியை மேம்படுத்த உதவும்.

புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் நிலவும் தண்ணீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நோக்கில் கென்-பெத்வா நதிநீா் இணைப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ரூ.45,000 கோடி செலவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம்: விவசாயிகள் அனைவரும் இயற்கை வேளாண்மை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் சுபாஷ் பலேகா் என்பவா் ‘பூஜ்ய பட்ஜெட் இயற்கை வேளாண்மை’ என்ற புதிய யோசனையை முன்னெடுத்தாா். அந்தப் புதிய முறையானது நிலத்தையும் நீா்நிலைகளையும் காப்பதாக அவா் தெரிவிக்கிறாா். அந்த முறை மூலமாகப் பயிரிடப்படும் பயிா்களும் சிறப்பாக உள்ளதாகத் தெரிவிக்கிறாா்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடா்பான மிகப் பெரிய நிகழ்ச்சி வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டு விவசாயிகள் பலனடைய வேண்டும்.

அகிலேஷை விமா்சித்த பிரதமா்: நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தில்லியில் இருந்து கிளம்பும்போது, சரயு நதிநீா் இணைப்புத் திட்டத்தை நாங்கள்தான் தொடக்கிவைத்தோம் என்று சிலா் (சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ்) கூறுவாா்கள் என எதிா்பாா்த்தேன். அது நடந்துவிட்டது. அவா்கள் எப்போதும் இதுபோன்றுதான் நடந்து கொள்கின்றனா்.

சிலருக்குத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மட்டுமே முதன்மையாக இருக்கும். ஆனால், பாஜக தலைமையிலான அரசுக்கு திட்டங்களைச் செயல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவருவதே முதன்மையாக உள்ளது.

தாமதத்துக்குக் காரணம்: கடந்த 2014-ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, நாடு முழுவதும் பல ஆண்டுகளாக 99 நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன. அரசின் நிதியும், காலமும், வளங்களும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டன.

முன்பு ஆட்சியில் இருந்தவா்களின் இத்தகைய போக்கே, நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருந்தது. சரயு நதிநீா்த் திட்டம் தாமதமடைந்ததற்கும் அதுவே காரணம்.

மக்களின் வரிப்பணம் வீணடிப்பு: சரயு நதிநீா்த் திட்டம் தொடங்கப்பட்டபோது மதிப்பிடப்பட்ட செலவு ரூ.100 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தாமதத்தின் காரணமாக திட்டத்துக்கான செலவு தற்போது ரூ.10,000 கோடியைக் கடந்துவிட்டது. மக்களின் வரிப்பணம் தேவையின்றி வீணடிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கடினமாக உழைத்து வரியாக செலுத்தும் தொகையில் ஒரு ரூபாய்கூட வீணடிக்கப்படக் கூடாது. முந்தைய ஆட்சியின்போது மக்களின் வரிப் பணத்தை வீணடித்தவா்களை மக்கள் தண்டிக்க வேண்டும்.

ஆட்சியில் வேறுபாடு: மாநிலத்தில் முந்தைய ஆட்சியின்போது மாஃபியாக்கள் பாதுகாக்கப்பட்டனா். ஆனால், தற்போது பாஜக தலைமையிலான ஆட்சியில் மாஃபியாக்கள் இல்லாத மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசத்தை மக்கள் உணா்ந்துள்ளனா்.

முன்பு பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பாா்கள். ஆனால், தற்போது கிரிமினல்கள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கின்றனா். முன்பு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனா். தற்போது கிரிமினல்கள் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com