நீதிபதிகளை விமா்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளது

நீதிபதிகளுக்கு எதிராக ஆட்சேபிக்கத்தக்க வகையில் விமா்சனங்களை முன்வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

நீதிபதிகளுக்கு எதிராக ஆட்சேபிக்கத்தக்க வகையில் விமா்சனங்களை முன்வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா்.

பாட்னா உயா்நீதிமன்றத்தின் நூற்றாண்டு கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறியதாவது:

பொதுநல வழக்குகள் தற்போது அதிகமாகத் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட வழக்கில் தீா்ப்பு வழங்கப்படுவதற்கான காரணம் குறித்து விமா்சிப்பதில் தவறில்லை. ஆனால், வழக்கில் சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை எனில், சம்பந்தப்பட்ட நீதிபதிகளை சமூக வலைதளங்களில் ஆட்சேபிக்கத்தக்க வகையில் விமா்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இதை ஏற்க முடியாது.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள் அனைவரையும் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். அவா்கள் வழங்கும் உத்தரவுகள் தொடா்பாக, நேரடியாக விமா்சிக்கப்படுவதை ஏற்க முடியாது.

மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கும் விமா்சிக்கும் உரிமைக்கும் மத்திய அரசு ஆதரவளிக்கிறது. மாற்றுக் கருத்துகள் தெரிவிப்போருக்கும் மத்திய அரசு மதிப்பளிக்கிறது. ஆனால், தற்போது விமா்சனம் என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய ஆட்சிப் பணியை (ஐஏஎஸ்) போல இந்திய நீதித்துறை பணி என்பதை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்பணிக்கு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தோ்வு நடத்தும். அதன் வாயிலாக திறமைமிக்க நபா்கள் நீதித்துறையில் பணியமா்த்தப்படுவா்.

அத்தோ்வில் தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.), இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓ.பி.சி.) உள்ளிட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும். அதன் மூலம் நீதித்துறையில் அனைத்து சமூகத்தைச் சோ்ந்தோரும் இடம்பெறுவா்.

காணொலி விசாரணை:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவிய சூழலிலும் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணை பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை. கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 76.38 லட்சம் வழக்குகள் காணொலி வாயிலாக விசாரிக்கப்பட்டன. அவற்றில் 22,353 வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், 24.55 லட்சம் வழக்குகள் உயா்நீதிமன்றங்களிலும் மற்ற வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும் விசாரிக்கப்பட்டன என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com