இந்தியா-நேபாளம் இடையேயான உறவால் அளவற்ற நன்மை: ராஜ்நாத் சிங்

இந்தியா - நேபாளம் இடையேயான உறவு அளவற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை கூறினாா்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)

இந்தியா - நேபாளம் இடையேயான உறவு அளவற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை கூறினாா்.

இந்தியா வந்துள்ள நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி உடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தக் கருத்தை அவா் தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலம் தா்சுலா-லிபுலேக் இடையே 80 கி.மீ. தொலைவில் புதிய நெடுஞ்சாலையை இந்தியா அமைத்தது. இந்த நெடுஞ்சாலையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மே 8-ஆம் தேதி திறந்து வைத்தாா். இதற்கு நேபாளம் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. பின்னா், இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள அரசியல் வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதற்கு இந்தியா சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சா்ச்சை காரணமாக இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட இந்த உறவை மீண்டும் மேம்படுத்தும் வகையில் இரு நாட்டு உயா் அதிகாரிகளின் கூட்டக் குழு கூட்டம் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் 6-ஆவது கூட்டுக் குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேபாள வெளியுறவு துறை அமைச்சா் பிரதீப் குமாா் கியாவாலி மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தாா். கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவரும், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பொருளாதாரம் மற்றும் வா்த்தகம், எல்லை மேலாண்மை, எரிசக்தி என்பன உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து வெள்ளிக்கிழமை விரிவாக ஆய்வு செய்தனா்.

அதன் பின்னா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சா் சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். இந்த சந்திப்புக்குப் பிறகு ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நேபாள வெளியுறவுத் துறை அமைச்சருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியா - நேபாளம் இடையேயான உறவு இரு அரசுகளுடனானது மட்டுமல்ல; இரு நாட்டு மக்களுடனும் கொண்ட உறவாகும். இரு நாடுகளிடையேயான இந்த உறவு அளவற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com