கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட உ.பி. சுகாதார ஊழியர் சாவு

உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.


மொரதாபாத்/ லக்னௌ: உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல என்றும், மாரடைப்பால் அவர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை தொடங்கிய கரோனா தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக, உ.பி.யில் 20,078 சுகாதார ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மொரதாபாத்தில் உள்ள தீனதயாள் உபாத்யாய அரசு மருத்துவமனையில் வார்டு பணியாளராக இருந்தவர் மஹிபால் (46). கரோனா தடுப்பூசி திட்டத்தின் அங்கமாக, அவருக்கும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

அதையடுத்து அவரது உடல்நிலை பாதிப்புக்குள்ளானதால், அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிறன்று இரவு இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் விஷால் கூறியதாவது:

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதும் எனது தந்தைக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டன. எனவே அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கடுமையான கரோனா தொற்றுக்காலத்திலும் கூட எனது தந்தை எந்தப் பாதிப்பும் இல்லாமல் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை ஆரோக்கியமாகவே இருந்தது. அவருக்கு இதுவரை மாரடைப்பு வந்ததில்லை. தடுப்பூசியின் பின்விளைவால்தான் எனது தந்தை இறந்திருக்கிறார். இதற்கு அரசு தகுந்த விளக்கமும் நிவாரணமும் அளிக்க வேண்டும் என்றார்.

ஆனால், மஹிபாலின் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்று அரசு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மொரதாபாத் மாவட்ட நீதிபதி ராகேஷ் சிங் கூறுகையில், ""கரோனா தடுப்பூசிகளைப் பொருத்த வரை மிகவும் பாதுகாப்பானவை. இதுவரை இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டோரில் யாரும் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. மஹிபால் விவகாரம் வேறு மாதிரியானது. அவரது மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமா என்று அறிய உயர்மட்ட மருத்துவ விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என்றார். 

மஹிபாலின் மரணம் மாரடைப்பால் நிகழ்ந்துள்ளதாகவும், கரோனா தடுப்பூசிக்கும் அவரது மாரடைப்புக்கும் தொடர்பில்லை என்றும், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் மிலிந்த் சந்திர கார்க் தெரிவித்தார். ""கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார ஊழியர்கள் சிலருக்கு பொதுவான ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிட்டன. மஹிபாலுக்கு நேர்ந்திருப்பது ஒவ்வாமை அல்ல. மூன்று மருத்துவர்கள் அவரது சடலத்தை மருத்துவக் கூராய்வு  செய்ததில், இருதயம் வீங்கி இருந்தது தெரிய வந்திருக்கிறது. மாரடைப்பால்தான் மஹிபால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்'' என்றார் அவர்.

தடுப்பூசியின் பின்விளைவுகளை ஆராயும் குழு மஹிபாலின் மரணம் குரித்து விரிவான ஆய்வு நடத்தும். இப்போதைக்கு அவரது மரணம் மாரடைப்பால் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறிய மாநில சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அமித் மோகன் பிரசாத், ""நாடு முழுவதும் மத்திய அரசால் அவசரப் பயன்பாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இரு கரோனா தடுப்பூசிகளும் மிகவும் பாதுகாப்பானவை. அவை குறித்து தவறான தகவல்களையோ வதந்திகளையோ பரப்ப வேண்டாம்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com