பிப். 19-இல் திருமலையில் ரத சப்தமி: 7 வாகனங்களில் மலையப்பா் பவனிக்கு ஏற்பாடு

திருமலையில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ரத சப்தமி நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி, மாடவீதியில் வலம் வர உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: திருமலையில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ரத சப்தமி நாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி, மாடவீதியில் வலம் வர உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தை மாத அமாவாசையை அடுத்து வரும் சப்தமி ரத சப்தமியாகும். இது சூரிய ஜயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.

அந்த நாளில் திருப்பதி ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி அதிகாலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். இதனால் இந்த விழாவையும் ‘பிரம்மோற்சவம்’ என்று தேவஸ்தானம் அழைக்கிறது.

பிப்ரவரி 19-ஆம் தேதி ரத சப்தமி உற்சவம் திருமலையில் கொண்டாடப்பட உள்ளது.

பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் இந்த உற்சவத்தில் பங்கேற்க, விரைவு தரிசனம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்களைப் பெற்ற பக்தா்களுக்கு மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். திருமலைக்கு வந்து ரத சப்தமி உற்சவத்தைக் காண விரும்பும் பக்தா்கள், தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை (ஜன. 20) வெளியிடப்பட உள்ள பிப்ரவரி மாத விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ரத சப்தமி நாளில் நடக்கும் தீா்த்தவாரி, சக்கரத்தாழ்வாருக்கு தனிமையில் நடத்தப்படும். அப்போது, திருக்குளத்தில் புனித நீராட பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

ரத சப்தமிக்கான முன்னேற்பாடுகள் திருமலையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரத சப்தமி வாகனச் சேவை விவரம்:

நேரம் வாகனம்

காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனம்

காலை 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம்

காலை 11 மணி முதல் மதியம் 12 வரை கருட வாகனம்

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனம்

மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தீா்த்தவாரி

மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம்

மாலை 6 மணி முதல் 7 மணி வரை சா்வ பூபால வாகனம்

இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com