வெள்ள நிவாரணத்துக்கு உடனடியாக ரூ.1,200 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

தமிழகத்துக்கு புயல், வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு உடனடியாக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்
வெள்ள நிவாரணத்துக்கு உடனடியாக ரூ.1,200 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

தமிழகத்துக்கு புயல், வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு உடனடியாக ரூ.1,200 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
 மேலும், தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
 இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை தில்லி வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அன்றைய தினம் இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
 அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தமிழகத்தின் நிறைவு செய்யப்பட்டுள்ள பல்வேறு பணிகளைத் தொடங்கிவைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகை தருமாறு பிரதமருக்கு முதல்வர் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கைகளையும் வலியுறுத்தி பிரதமரிடம் அவர் மனு அளித்தார். அதன் விவரம்:
 தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்தாண்டின் இறுதியில் நிவர், புரெவி ஆகிய இரண்டு புயல்கள் தாக்கின. நிவர், புரெவி ஆகிய இரு புயல்களுக்கும் மொத்தமாக தற்காலிக நிவாரணம், நிரந்தர நிவாரணம் ஆகியவற்றுக்கு முறையே ரூ. 1126.83 கோடி, ரூ.4137.55 கோடி நிதி வழங்குமாறு கடிதங்கள் வாயிலாக தெரிவித்திருந்தேன்.
 பயிர்ச் சேதத்துக்கு...தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அதிக மழைப் பொழிவினால் 4.5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. தேசிய பேரிடர் நிவாரண நிதி வழிகாட்டிவிதிமுறைகளின்படி, பயிர்ச் சேதத்துக்கு மட்டும் ரூ. 472 கோடியை வழங்க வேண்டும்.
 ரூ.2,615 கோடி செலவிடப்பட்டுள்ளது: தமிழக அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இதுவரை ரூ.2,615 கோடி வரை பல்வேறு துறைகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கரோனா நோய்த்தொற்றுப் பணிகள், புயல் நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டு விட்டது. எனவே, தற்போது மாநில பேரிடர் மேலாண்மை நிவாரணத்துக்கு ரூ.1,255 கோடி பற்றாக்குறையாக உள்ளது.
 மத்திய குழுக்கள் பார்வையிட்டும்கூட...இரண்டு முறை மத்திய குழுக்களுக்கும் தமிழகத்துக்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளன. மத்திய அரசிடமிருந்து இந்தப் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்க வில்லை.
 ரூ. 1,200 கோடி நிவாரண நிதி தேவை: தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில் உடனடியாக ரூ .1,200 கோடியை நிவாரண உதவியாக மத்திய அரசு அளிக்க வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் நிதிச்சுமை குறைவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 பிரதமர் மோடியைச் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தொடக்கி வைக்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் வருவதாக தெரிவித்தார்.
 காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம், கல்லணை புனரமைப்புத் திட்டம், பவானி நவீனப்படுத்தும் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது. சென்னை-வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை திட்டம், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கூட்டுக் குழாய் எரிவாயுத் திட்டம் ஆகியவற்றை தொடங்கிவைக்க வருமாறும் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 கோதாவரி- காவிரி இணைப்புக்கு விரிவான திட்டஅறிக்கைக்கு மத்திய ஜல்சக்தி துறை விரைவில் ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
 காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயன்பெறும் சுமார் ரூ.6,941 கோடி செலவிலான காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டம் மற்றும் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டமான நடந்தாய் வாழி காவிரி (ரூ.1,958 கோடி - மத்திய பங்கு)ஆகிய இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு (சுமார் ரூ.30,000 கோடி) நிதி உதவி அளிக்குமாறும் கேட்டுக்கொண்டேன்.
 கொப்பரைத் தேங்காய்: கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.99.60-ஆக இருப்பதை ரூ.150-ஆக உயர்த்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் முக்கிய பல்வேறு திட்டங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதாரங்களை பெற நிதி அனுமதி வழங்க கோரப்பட்டது.
 திருவள்ளுவர் மாவட்டம், மணலூரில் மருந்துகள் பூங்கா, காஞ்சிபுரம் ஒரகடத்தில் மருத்துவக் கருவிகள் பூங்கா, இரண்டு ஜவுளிப் பூங்காக்கள் ஆகிய தமிழக அரசின் திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கவும் கோரப்பட்டுள்ளது.
 ஏற்கனவே, தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடமாக சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் போன்ற நகரங்களை இணைத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை விரைந்த செயல்படுத்த பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.
 மீனவர்கள் பிரச்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையிலிருந்து நாற்பது தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 12 மீனவர்களும் விரைவில் விடுவிக்கவும், மீனவர்களின் படகுகளை திரும்பப்பெறவும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
 வெள்ளப்பள்ளம் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட 18 சிறு மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பதற்கான கட்டுமானத் திட்டங்களுக்கும் நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com