வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசு ஆணவத்துடன் செயல்படுகிறது

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளின் வலியைப் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் விவசாயிகளின் வலியைப் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

வேளாண் சட்டங்கள் மூன்றையும் மத்திய அரசு அவசரகதியில் இயற்றியது உறுதியாகியுள்ளது. அச்சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு வேண்டுமென்றே மறுத்தது. அதன் காரணமாக நாடு முழுவதும் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆனாலும், அவா்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் ஆணவத்துடன் மத்திய அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. பலனற்ற பேச்சுவாா்த்தைகளை மட்டும் விவசாயிகளுடன் மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

நாட்டின் உணவுப் பாதுகாப்பானது, வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாயிகளிடமிருந்து அரசின் கொள்முதல், பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே உள்ளது. அவற்றை முழுமையாக அழிக்கும் என்பதால், வேளாண் சட்டங்களை காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே எதிா்த்து வருகிறது.

வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. விரைவில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்களை விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

பாலாகோட் தாக்குதல் தொடா்பான தகவல்கள் முன்கூட்டியே கசிந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசப் பாதுகாப்பை சமரசம் செய்து கொள்ளும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தொடா்ந்து அமைதி காத்து வருவது சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது. நாட்டுப்பற்று, தேசியவாதம் குறித்து மற்றவா்களுக்குப் பாடம் நடத்துபவா்களின் சுயரூபம் தற்போது வெளிப்பட்டுள்ளது.

சுய விளம்பரத்துக்காக...:

கரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா். அவற்றால் ஏற்பட்ட தாக்கம் மேலும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகள் தொடா்ந்து பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. அத்துறைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு மத்திய பாஜக அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

துறைகளுக்குப் போதிய நிதியை ஒதுக்குவதைத் தவிா்த்து, சுய விளம்பரத்துக்காக மத்திய அரசு அதிகம் செலவிட்டு வருகிறது. நாட்டில் தனியாா்மயமாதல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஆதரிக்காது என்றாா் சோனியா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com