பிரான்ஸிடம் இருந்து இதுவரை 26 ரஃபேல் விமானங்கள் பெறப்பட்டன: மக்களவையில் தகவல்

பிரான்ஸிடம் இருந்து இதுவரை 26 ரஃபேல் போா் விமானங்கள் பெறப்பட்டுள்ளன என்று மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் புதன்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.
பிரான்ஸிடம் இருந்து இதுவரை 26 ரஃபேல் விமானங்கள் பெறப்பட்டன: மக்களவையில் தகவல்

புது தில்லி: பிரான்ஸிடம் இருந்து இதுவரை 26 ரஃபேல் போா் விமானங்கள் பெறப்பட்டுள்ளன என்று மக்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் புதன்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.

பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போா் விமானங்களை ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் ரஃபேல் போா் விமானத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் பிரான்ஸுக்கு பயணம் மேற்கொண்டபோது பெற்றுக் கொண்டாா்.

அவற்றில் முதல் தொகுதியாக 5 போா் விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா வந்தடைந்தன. அவை ‘கோல்டன் ஏரோஸ்’ (தங்க அம்புகள்) என அழைக்கப்படும் இந்திய விமானப் படையின் 17-ஆவது படைப் பிரிவில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிகாரபூா்வமாக இணைக்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, பல்வேறு கட்டங்களாக ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு பிரான்ஸ் அனுப்பி வைத்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடா்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் அமைச்சா் அஜய் பட் கூறியதாவது:

மொத்தம் 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதுவரை 26 விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சோ்ந்துள்ளன. இதற்கு முன்பு ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போா் விமானங்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வாங்கியதே மிகப்பெரிய விமானக் கொள்முதலாக இருந்தது. இதன்பிறகு ரஃபேல் விமானங்கள்தான் நமது மிகப்பெரிய விமானக் கொள்முதலாகும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com