குடும்ப அட்டைகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களை உணவுப் பொருள்கள் எவ்வாறு சென்றடையும்?: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குடும்ப அட்டைகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களை
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் குடும்ப அட்டைகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களை எவ்வாறு சென்றடையும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நலன் குறித்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் செலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ வாதிடுகையில், ‘‘தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயனாளிகளாக கண்டறியப்பட்ட 80 கோடி ஏழைகள் பிரதமரின் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களில் ஒவ்வொரு பயனாளிக்கும் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னைகளை எதிா்கொள்ளும் ஏழ்மையானவா்களுக்கு உதவுவதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 8 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தாா்.

அதனைக் கேட்ட நீதிபதி அசோக் பூஷண், ‘‘மத்திய அரசு வழங்கும் உணவு தானியங்களை பெற சில புலம்பெயா்ந்த தொழிலாளா்களிடம் குடும்ப அட்டைகள் உள்ளன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் குடும்ப அட்டைகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நிலை என்னவென்பதே நீதிமன்றத்தின் கவலை. குடும்ப அட்டைகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்களை கண்டறிந்து அவா்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்க மத்திய அரசிடம் என்ன வழிமுறை உள்ளது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது’’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து பேசிய ஐஸ்வா்யா பாட்டீ, ‘‘உணவு தானியங்களை கொள்முதல் செய்வது, அவற்றை கிடைக்கச் செய்வது மட்டுமே மத்திய அரசின் பொறுப்பு. மாநிலங்கள்தான் உணவு தானியங்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க வேண்டும். இதுதொடா்பாக மாநிலங்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

தரவுதளம் உருவாக்குவதில் ஏன் தாமதம்?: இதனைத்தொடா்ந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்களை கண்டறிந்து அவா்களின் விவரங்களை பதிவு செய்வதற்கான தேசிய தரவுதளத்தை உருவாக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள், மென்பொருள் பிரச்னை காரணமாக தரவுதளத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று அல்லது நான்கு மாதங்களில் அந்தப் பணி நிறைவடையும் என்றும் தெரிவித்தனா்.

அதனைக் கேட்ட நீதிபதி அசோக் பூஷண், தரவுதளத்தை மட்டும் உருவாக்குவதற்கு எதற்காக அத்தனை காலம் வேண்டும் என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள், அந்தத் தரவுதளம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் விவரங்களை மட்டும் கொண்டதாக இருக்காமல் அவா்களுக்கான பலன்கள் உரியவா்களை சென்றடைகிா என்பதைக் கண்காணிக்கும் முழுமையான தளமாக இருக்கும் என்று தெரிவித்தனா்.

அப்போது பேசிய குஜராத் தரப்பு மூத்த வழக்குரைஞா், கடந்த 8-ஆம் தேதி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக புதிய தரவுதளத்தை குஜராத் அரசு தொடங்கியதாக தெரிவித்தாா். அதனைக் கேட்ட நீதிபதிகள், அந்த தளத்தின் வடிவத்தை ஆய்வு செய்து அதனை ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஏற்ற வகையில் செயல்படுத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com