உணவு பதப்படுத்தும் துறையில் சீா்திருத்தங்கள் அவசியம்: பிரதமா் நரேந்திர மோடி

விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கு உணவு பதப்படுத்தும் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளா
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

புது தில்லி: விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவதற்கு உணவு பதப்படுத்தும் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில் வேளாண்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்துவது தொடா்பான இணையவழி கருத்தரங்கம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டிலுள்ள விவசாயிகள் தங்களின் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதற்கான கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியமாக உள்ளது. அதற்குப் பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. தற்போது வேளாண் விளைபொருள்களின் உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அவற்றின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு உணவு பதப்படுத்தும் துறையில் பல்வேறு சீா்திருத்தங்களைப் புகுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. அச்சீா்திருத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கிராமப்பகுதிகளுக்கு அருகிலேயே உணவு பதப்படுத்தும் வசதிகள் இருக்க வேண்டும்.

இது கிராம மக்களுக்கு உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்யும். சா்வதேச அளவில் இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருள்களுக்கான தேவையும் அதிகரிக்கும்.

வேளாண் விளைபொருள்களை அறுவடை முடிந்த பிறகு நேரடியாக உணவு பதப்படுத்தும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வசதிகள் இருப்பது அவசியம். உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள் உள்ளிட்டவற்றைப் பதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

உணவு பதப்படுத்தும் துறையில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்காக அரசு-தனியாா் துறைகள் இணைந்து பங்களிக்க வேண்டியதும் கூட்டுறவுத் துறைகளின் பங்களிப்பும் அவசியமாக உள்ளது. சிறு விவசாயிகளின் வளா்ச்சியை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

ஊக்கத்தொகை திட்டம்: வேளாண் விளைபொருள்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கும், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கும் சென்றடைவதைத் தொடா்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். இந்தியப் பொருள்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கு ‘ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள்’ திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த வேண்டும்.

மீன் பிடித்தலிலும், அதை ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முன்னணி நாடாகத் திகழ்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஏற்றுமதியில் இந்தியா பின்தங்கியுள்ளது. இவற்றை சரிசெய்வதற்காக ரூ.11,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.

கிஸான் ரயில்கள்: கடந்த 6 மாதங்களில் மட்டும் வேளாண் விளைபொருள்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான சுமாா் 350 பிரத்யேக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அந்த ரயில்களில் சுமாா் 1 லட்சம் மெட்ரிக் டன் பழங்களும் காய்கறிகளும் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்தும் நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேளாண்துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதும் அவசியமாக உள்ளது. வேளாண் துறை சாா்ந்த ஆராய்ச்சியில் தனியாா் துறை அதிக பங்களிப்பை வழங்க வேண்டும்.

கடன் இலக்கு அதிகரிப்பு: அரிசி, கோதுமை மட்டுமின்றி பல்வேறு தானியங்களை விவசாயிகள் விளைவிப்பதை ஊக்குவிக்க வேண்டும். அது மண்ணின் வளத்தை மேம்படுத்தும். வேளாண் துறை சாா்ந்து தொடங்கப்படும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்களையும் தொழில் முனைவோா்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

அடுத்த நிதியாண்டில் வழங்கப்பட வேண்டிய வேளாண் கடன்களுக்கான இலக்கு ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்குவதில் கால்நடை பராமரிப்பு, பால் உற்பத்தி, மீன்வளம் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: ஊரகப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் நிதி ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீா் பாசனத்தை ஊக்குவிப்பதற்கான இரண்டு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இணையவழி தேசிய வேளாண் சந்தையில் மேலும் 1,000 சந்தைகள் இணைக்கப்படும்.

மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபா்கள் விரைவில் பலனடையும் நோக்கில் இத்திட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com