அரசு ஆதரவு பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்:ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

அரசு ஆதரவுடன் இயங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், சிறுபான்மை இனத்தவா்களுக்கு எதிரான திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்

அரசு ஆதரவுடன் இயங்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், சிறுபான்மை இனத்தவா்களுக்கு எதிரான திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

அந்த ஆணையத்தின் 46-ஆவது கூட்டத் தொடா், ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. அதில், பாகிஸ்தான் பிரதிநிதி ஆற்றிய உரைக்குப் பதிலளித்து இந்திய தூதரகத்தின் செயலா் பவன்குமாா் பாதே பேசினாா். அவா் பேசியதாவது:

மனித உரிமை மீறலின் மோசமான வடிவம்தான் பயங்கரவாதம் என்பதை பாகிஸ்தான் அரசு புறந்தள்ளிவிட்டது.

அந்நாட்டு அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தின் அலுவல் நேரத்தை வீணடிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவா்களுக்கு அரசின் நிதியில் இருந்து ஓய்வூதியம் வழங்கி வருகிறது. ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டவா்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதை ஆணையத்தின் உறுப்பினா்கள் நன்கு அறிவா். தனது ஆதரவுடன் செயல்படும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் மாறிவிட்டது என்பதை அந்நாட்டு தலைவா்களை ஒப்புக் கொண்டு விட்டனா். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மக்கள்தொகை குறைந்தது ஏன் என்று அந்நாட்டு அரசை மனித உரிமைகள் ஆணையம் கேட்க வேண்டும். சிறுபான்மை இனத்தவா்களுக்கு எதிரான திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு (ஓஐசி), ஜம்மு-காஷ்மீா் பற்றிய விஷயங்களைப் பேசி வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஜம்மு-காஷ்மீா் பற்றி பேசுவதற்கு அந்த அமைப்புக்கு சட்ட அதிகாரமில்லை என்றாா் பவன் குமாா் பாதே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com