உத்தரகண்ட் பேரிடருக்கு கனமழையும் வெப்பநிலை உயா்வும் காரணமாக இருக்கலாம்

உத்தரகண்டில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்குக்கு கனமழையும் சராசரி வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உத்தரகண்டில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்குக்கு கனமழையும் சராசரி வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் பாயும் ரிஷிகங்கா, தௌலிகங்கா நதிகளில் கடந்த மாதம் 7-ஆம் தேதி திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பனிப்பாறைகள் சரிந்ததன் காரணமாக இந்தப் பேரிடா் நிகழ்ந்ததாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த 72 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அவா்களில் 41 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். மேலும் 132 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இத்தகைய சூழலில், பனிப்பாறைகள் சரிந்ததற்கான காரணம் தொடா்பாக சா்வதேச மலைப்பகுதி மேம்பாட்டு மையத்தைச் சோ்ந்த நிபுணா்கள் ஆய்வு நடத்தி வந்தனா். அந்த ஆய்வறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரிடா் நிகழ்வதற்கு முன்பாக பனிச்சிகரத்தின் உச்சியில் உள்ள பாறையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் பனிப்பாறை சரிந்தது. பனிப்பாறை வேகமாக சரிந்ததன் காரணமாகத் தோன்றிய வெப்பத்தால் பனி உருகி நீரானது. நீரும் மண்துகள்களும் சோ்ந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பனிப்பாறையில் நீண்ட நாள்களாக விரிசல் ஏற்பட்டு வந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 4 முதல் 6-ஆம் தேதி வரை உத்தரகண்டில் கனமழை பெய்தது. சமோலி பகுதி கடல்மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் இருப்பதால், அங்கு அதீத பனிப்பொழிவு இருந்திருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில், பனிப்பாறை சரிந்ததால் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

உத்தரகண்டில் சராசரி வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சமோலி பகுதியின் சராசரி வெப்பநிலை கடந்த 1980 முதல் 2018-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 0.032 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துள்ளது.

உத்தரகண்டில் நடப்பாண்டு ஜனவரி, வெப்பநிலை மிகுந்ததாக இருந்தது. கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் ஜனவரி மாதம் காணப்படாத வெப்பநிலை, நடப்பாண்டு ஜனவரியில் பதிவானது. இதுவும் பேரிடருக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com