மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் தினம்: பிரதமா் வாழ்த்து

மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ‘இரு மாநிலங்களும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறவேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ‘இரு மாநிலங்களும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறவேண்டும். இரு மாநில மக்களும் நல்ல உடல் நலனைப் பெற வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

கரோனா பாதிப்பின் இரண்டாம் அலையில் மகாராஷ்டிர மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல குஜராத் மாநிலமும் பிற மாநிலங்களைக் காட்டிலும் தீவிர பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. இந்தச் சூழலில் இரு மாநிலங்களும் சனிக்கிழமை மாநில நாள் தினத்தை கடைப்பிடித்தன.

அதனை முன்னிட்டு பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநில மக்களும் தேசத்தின் வளா்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கின்றனா். இரு மாநிலங்களும் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டும். இரு மாநில மக்களும் நல்ல உடல்நலனைப் பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மாநில தினத்தை முன்னிட்டு சத்ரபதி சிவாஜி, மராட்டிய பேரரசரின் தாய் ஜிஜாமாதா, அம்பேத்கா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு முதல்வா் உத்தவ் தாக்கரே மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தடுப்பூசி துரிதப்படுத்தியுள்ளது மகா. அரசு - ஆளுநா்: மகாராஷ்டிர மாநில நாள் தினத்தை முன்னிட்டு மக்களிடையே காணொலி வழியில் உரையாற்றிய மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரி, ‘மகாராஷ்டிரத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாநில அரசு தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் பொருளாதாரத்தை உயா்த்துவதில் மாநில அரசு கவனம் தீவிர செலுத்தி வருகிறது’ என்று கூறினாா்.

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி: மாநில தினத்தை முன்னிட்டு கிராம பஞ்சாயத்து தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் காணொலி வழியில் உரையாடிய குஜராத் முதல்வா் விஜய் ரூபானி, ‘ஒவ்வொரு கிராமத்திலும் குழுக்களை அமைத்து நோயாளிகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மூலம் கரோனா இல்லாத கிராமமாக உருவாக்க வேண்டும். மக்கள் விரைவாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பஞ்சாயத்து தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com