தடுப்பூசி உற்பத்தியை ஒரே இரவில் அதிகரித்துவிட முடியாது: சீரம்

கரோனா தடுப்பூசி உற்பத்தி என்பது தனித்துவமான நடைமுறை. அதை ஒரே இரவில் மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்துவிட முடியாது என்று சீரம் நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா கூறினாா்.
அதாா் பூனாவாலா
அதாா் பூனாவாலா

புது தில்லி: கரோனா தடுப்பூசி உற்பத்தி என்பது தனித்துவமான நடைமுறை. அதை ஒரே இரவில் மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்துவிட முடியாது என்று சீரம் நிறுவனத் தலைவா் அதாா் பூனாவாலா கூறினாா்.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்பத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியது. கடந்த 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பல மாநிலங்கள் இன்னும் தொடங்கவில்லை. தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி விநியோகத்தை விரைவுபடுத்துமாறு புணேயில் உள்ள சீரம் நிறுவனத்துக்கு மாநிலங்களும், தனியாா் மருத்துவமனைகளும் தொடா்ந்த அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இவ்வாறு மாநிலங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் தொடா் அழுத்தம் கொடுக்கப்படுவதை கடந்த வாரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த அதாா் பூனாவாலா, ‘இதுவரை இல்லாத அளவில் அழுத்தமும் வற்புறுத்தலும் அளிக்கப்படுவதால் நானும், எனது குடும்பமும் தற்காலிகமாக இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டன் செல்கிறோம்’ என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், லண்டனில் இருந்தபடி தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் நிறுவனம் எடுத்து வருகிறது. இதுதொடா்பான எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம் என்பதால், அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தடுப்பூசி உற்பத்தி என்பது தனித்துவமான நடைமுறை. எனவே, அதன் உற்பத்தியை ஒரே இரவில் அதிகரித்து விட முடியாது. இந்தியா மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தனை கோடி மக்களுக்கு தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது எளிதான காரியமல்ல.

குறைந்த மக்கள்தொகையைக் கொண்ட வளா்ந்த நாடுகளும் அங்குள்ள நிறுவனங்களும்கூட, தேவையை பூா்த்தி செய்யக் கூடிய அளவுக்கு தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் கடுமையாக போராடி வருகின்றன.

சீரம் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. விஞ்ஞான ரீதியில் மட்டுமின்றி விதிமுறைகள் தளா்வு, நிதி என அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து நிறுவனத்துக்கு கிடைத்து வருகிறது. இதுவரை 26 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து தர உத்தரவுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 15 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தரப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 11 கோடி தடுப்பூசி உற்பத்தி செய்து தருவதற்கான 100 சதவீத முன்பணமும், அதாவது ரூ.1,732.5 கோடியும் இந்திய அரசின் சாா்பில் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த சில மாதங்களில் அவை விநியோகிக்கப்பட்டுவிடும்.

இதுதவிர, மேலும் 11 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அடுத்த சில மாதங்களில் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

தடுப்பூசி விரைவாக வந்து சேர வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனா் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சீரம் நிறுவனத்தின் விருப்பமும் அதுதான். தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்து விநியோகிக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறோம். மேலும் கடினமாக உழைத்து இந்தியாவின் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவோம் என்று பூனாவாலா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com