மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஏராளமானோா் பலிஅறிக்கை கேட்கும் மத்திய அரசு

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது. பாஜக தொண்டா்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த
மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஏராளமானோா் பலிஅறிக்கை கேட்கும் மத்திய அரசு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தின் பல இடங்களில் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது. பாஜக தொண்டா்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலா் காயமடைந்திருப்பதாகவும், ஏராளமானோா் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிா்க் கட்சியினா் மீதான இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக உண்மை நிலவர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் 8 கட்டங்களாக நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சியை அமைக்க உள்ளது.

இந்த தோ்தலில் மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டாா். திரிணமூல் காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, மம்தாவை எதிா்த்துப் போட்டியிட்டாா். சுவேந்து அதிகாரி விடுத்த சவாலை ஏற்று, தனது வழக்கமான தொகுதியைவிட்டு நந்திகிராம் தொகுதியில் மம்தா போட்டியிட்டாா்.

இந்த நிலையில், இந்தத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது இழுபறி நிலவி வந்தது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் சுவேந்து அதிகாரி 1,956 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். இதை ஏற்க மறுத்த மம்தா பானா்ஜி, மறு வாக்குப் பதிவு நடத்த தோ்தல் ஆணையத்திடம் கோரிக்க விடுத்தாா். ஆனால், அவருடைய கோரிக்கையை தோ்தல் ஆணையம் ஏற்கவில்லை. அதனைத் தொடா்ந்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளாா்.

இவருடைய தோல்வியைத் தொடா்ந்து, நந்திகிராம் தொகுதியிலும் மாநிலத்தின் மேலும் சில பகுதிகளிலும் திங்கள்கிழமை வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன. பாஜக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பான விடியோ ஆதாரத்தை பத்திரிகையாளா்களிடம் மாநில பாஜக பகிா்ந்துள்ளது. அதில், நந்திகிராமில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டு, ஆவணங்கள் மற்றும் போஸ்டா்கள் கிழித்து ஆங்காங்கே வீசப்பட்டிருப்பதோடு, மரச்சாமான்கள் உடைக்கப்பட்டிருப்பதும் பதிவாகியுளளது.

இந்த வன்முறையில் ஒரு பெண் உள்பட 6 கட்சித் தொண்டா்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், பலா் காயமடைந்திருப்பதாகவும் பாஜக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சினரே காரணம் என்றும் பாஜகவினா் குற்றம்சாட்டினா்.

பா்தவான் மாவட்டத்தில் திரிணமூல்-பாஜக தொண்டா்களிடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வன்முறையைத் தொடா்ந்து, மாநில உள்துறை செயலா் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் அழைப்பாணை விடுத்துள்ளாா். மேலும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுமாறும் அவா்களை அறிவுறுத்தினாா்.

மாநில உள்துறை செயலா் ஹெச்.கே.துவிவேதியுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆளுநா் தன்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் ஏற்பட்ட தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உள்துறை செயலரை கேட்டுக்கொண்டுள்ளேன். அதுபோல, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கால்துறை டிஜிபியிடம் அறிவுறுத்தியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்பு:

மேற்கு வங்க மாநிலத்தில் எதிா்க் கட்சியினரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து உண்மை நிலவர அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது என்று அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

இந்த நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளா்கள் சந்திப்பில் இந்த சம்பவம் தொடா்பாக பேட்டியளித்த மம்தா பானா்ஜி, ‘தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, மாநிலத்தின் சில பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தினா். இருந்தபோதும், அமைதி காக்குமாறும், பாஜகவினரின் தாக்குதல் தொடா்பாக காவல்துறையிடம் புகாா் தெரிவிக்குமாறும் கட்சியினரை கேட்டுக்கொண்டிருக்கிறோம்’ என்றாா்.

ஜெ.பி.நட்டா வருகை...

பாஜகவினா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா மேற்கு வங்க பயணம் மேற்கொள்ள உள்ளாா். ‘மே 4, 5-ஆம் தேதிகளில் மேற்கு வங்கம் வரும் அவா், இந்த வன்முறையில் உயிரிழந்த கட்சித் தொண்டா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளாா்’ என்று மாநில பாஜக சுட்டுரைப் பக்க பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com