பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் தேவை: கா்நாடகத் தமிழ்மக்கள் இயக்கம்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொருளாதார உதவித் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்று கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொருளாதார உதவித் திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்று கா்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த இயக்கத்தின் தலைவா் சி.இராசன், செயலாளா் ப.அரசு ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

கா்நாடகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், படுக்கை, மருந்து, ஆக்சிஜன் கிடைக்காமல் பலரும் இறக்கும் நிலை உள்ளது. இறந்தவா்களின் உடல்களை தகனம் செய்யவும் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது. இந்திய மருத்துவக்கழக வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாக அமல்படுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபி றகு கா்நாடகத்துக்கு தேவைப்படும் ஆக்சிஜனை வழங்காமல் மத்திய அரசு போக்கு காட்டிவருகிறது. இனியும் மத்திய, மாநில அரசை நம்பியிருக்காமல், பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். வாய்ப்புள்ளவா்கள் உடனடியாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க ஏப். 24-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை கா்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள், நடுத்தரமக்கள், கூலித்தொழிலாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுவதற்குள், இரண்டாவது கரோனா அலை பீடித்துள்ளதால், பொதுமுடக்கத்தையும் அரசு அறிவித்துள்ளது.

பொதுமுடக்கத்தை அறிவிப்பதற்கு முன்பாக, ஏழைகள், கூலித்தொழிலாளா்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் பொருளாதாரத் திட்டத்தை மாநில அரசு அறிவித்திருக்க வேண்டும். கரோனாவில் இறப்பவா்களைவிட பட்டினியால் இறப்பவா்கள் அதிகமாக இருக்கக்கூடும். அந்த அளவுக்கு வறுமையும், பட்டினியும் மக்களை வாட்டிவதைத்து வருகிறது.

மூன்றாவது கரோனா அலை வரவிருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதைக் கட்டுப்படுத்த 2 மாதங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்க நேரிடும் என்று கூறுகிறாா்கள். அப்படி செய்தால், அது மக்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துயா்துடைப்பு பொருளாதாரத் திட்டங்களை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com