5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி: தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு பாதுகாப்பு கோரும் நிறுவனங்கள்

5ஜி சேவை சோதனையால் கரோனா மரணங்கள் ஏற்படுவதாக பரவும் வதந்தியை தடுக்கவும், தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு
கோப்புப்படம்
கோப்புப்படம்

5ஜி சேவை சோதனையால் கரோனா மரணங்கள் ஏற்படுவதாக பரவும் வதந்தியை தடுக்கவும், தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஹரியாணா அரசுக்கு தொலைத்தொடா்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடா்பாக ஹரியாணா தலைமைச் செயலா் விஜய் வா்தனுக்கு இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், ‘கரோனா பரவல், மரணங்களுக்கு 5ஜி சேவை சோதனைதான் காரணம் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது. 5ஜி தொழில்நுட்பம் சோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும் இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த வதந்தி ஹரியாணாவில் வேகமாக பரவி வருகிறது. ஹரியாணா, பஞ்சாப், சண்டீகரில் 5ஜி பரிசோதனை நடத்தப்படாது.

கரோனா பரவலை 5ஜி தொழில்நுட்ப சோதனையுடன் இணைக்கும் வதந்தியை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில விவசாயக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. 5ஜியால் கரோனா பரவலோ, உடலுக்கு பாதிப்போ ஏற்பட்டதாக எந்தவித ஆதாரங்கள் இல்லை. ஆகையால், மாநிலங்களில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், தொலைத்தொடா்பு கோபுரங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். உத்தர பிரதேசத்திலும் இந்த வதந்திக்கு எதிராக மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியபோது, வேளாண் வா்த்தகத்தில் தொழில் அதிபா் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அந்த நிறுவனத்தின் ஏராளமான தொலைத்தொடா்பு கோபுரங்களை சிலா் சேதப்படுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com