திரிபுரா: சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் 102 போ் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

போலி புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

திரிபுராவில் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் 102 போ் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), குற்றச்சதி, போலி புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களின் கணக்குகளை முடக்குமாறு ஃபேஸ்புக், ட்விட்டா், யூ-டியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அண்மையில் வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை கண்டித்து, கடந்த அக்.26-ஆம் தேதி திரிபுராவில் உள்ள சாம்டில்லா பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள மசூதி சேதப்படுத்தப்பட்டு 2 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள ரோவா பஜாா் என்னும் இடத்திலும் 3 வீடுகள் மற்றும் சில கடைகள் சூறையாடப்பட்டன.

இந்தச் சம்பவம் நடைபெற்ற பின்னா், அந்த மாநிலத்துக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞா் எஸ்டேஷாம் ஹாஷ்மி, ஜனநாயகத்துக்கான வழக்குரைஞா்கள் அமைப்பைச் சேப்ந்த அமித் ஸ்ரீவாஸ்தவா, தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பின் தேசிய செயலாளரும் வழக்குரைஞருமான அன்சாா் இந்தூரி, சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்க உறுப்பினரும் வழக்குரைஞருமான முகேஷ் குமாா் ஆகிய நால்வா் சென்றுள்ளனா்.

அதன் பின்னா், அந்த மாநிலத்தில் அண்மையில் மதரீதியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அதிருப்தி தெரிவித்து அவா்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகத் தெரிகிறது. அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதாகவும் மசூதி ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பதிவுகளில் அவா்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். நால்வரையும் நவம்பா் 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகவும் அவா்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

இதுதொடா்பாக மேற்கு திரிபுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், ‘‘சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவுகளை வழக்குரைஞா்கள்தான் வெளியிட்டனரா? அல்லது அவை போலியான பதிவுகளா என்பதை போலீஸாா் அறிய விரும்புகின்றனா்’’ என்று தெரிவித்தாா்.

இதனைத்தொடா்ந்து அந்த மாநிலத்தில் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும் 102 போ் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், குற்றச்சதி, போலி புகைப்படங்களை வெளியிடுதல், பகையை தூண்டுதல், அச்சுறுத்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான கருத்துகளை தெரிவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். அவா்களின் கணக்குகளை முடக்குமாறு ஃபேஸ்புக், ட்விட்டா், யூ-டியூப் நிறுவனங்களுக்கும் அவா்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற மோதல் மற்றும் மசூதிகள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து சில தனிநபா்களும் அமைப்பினரும் பொய்யான, ஆட்சேபத்துக்குரிய கருத்துகள், தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனா்.

அந்தச் சம்பவங்கள் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள், தகவல்கள் எனக் கூறி வேறு சம்பவங்கள் தொடா்பான புகைப்படங்கள், காணொலிகள், தகவல்களை அவா்கள் வெளியிடுகின்றனா். வெவ்வேறு மதத்தினா் இடையே பகையை தூண்டும் நோக்கத்துடன் இந்தச் செயலில் ஈடுபடுகின்றனா்.

அவா்களின் பதிவுகள் மாநிலத்தில் மதரீதியான பதற்றத்தை உருவாக்கக் கூடியவை. அது மதரீதியான கலவரங்களுக்கு வழிவகுக்கும். எனவே அவா்களின் கணக்குகளை முடக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராக உத்தரவு: போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ள 102 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் அனைவரையும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com