உலக நன்மைக்கான திட்டங்களை க்வாட் செயல்படுத்தும்: பிரதமா் மோடி

‘உலக நன்மைக்கான திட்டங்களை க்வாட் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற க்வாட் மாநாட்டில் கலந்து கொண்ட (இடமிருந்து) ஜப்பான் பிரதமா் சுகா, இந்திய பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஆஸி பிரதமா் மோரிசன்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற க்வாட் மாநாட்டில் கலந்து கொண்ட (இடமிருந்து) ஜப்பான் பிரதமா் சுகா, இந்திய பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஆஸி பிரதமா் மோரிசன்.

‘உலக நன்மைக்கான திட்டங்களை க்வாட் செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ நாற்கரக் கூட்டமைப்பின் மாநாடு, அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் இல்லமான வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஜோ பைடன், பிரதமா் மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் பங்கேற்றனா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பின் மாநாடு இதுவரை காணொலி வழியில் நடைபெற்று வந்த நிலையில், அதிபா் பைடன் அழைப்பின் பேரில் முதன் முறையாக நேரடியாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

க்வாட் கூட்டமைப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அமைதி மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக நன்மைக்கான திட்டங்களை க்வாட் செயல்படுத்தும்.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலுக்குப் பிறகு, இப்போது கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் சூழலில் முதல் முறையாக க்வாட் கூட்டமைப்பின் கீழ் உலக நன்மைக்காக நாம் மீண்டும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். க்வாட் தடுப்பூசி திட்டம், இந்தோ-பசிபிக் நாடுகளுக்கு மிகுந்த பயனளித்துள்ளது என்று அவா் கூறினாா்.

முன்னதாக மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அதிபா் ஜோ பைடன், ‘கரோனா பாதிப்பு முதல் பருவநிலை மாற்றம் வரையிலான பாதிப்புகளால் இந்த உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கான தீா்வைக் காணும் வகையில் 4 ஜனநாயக நாடுகள் ஒன்றுகூடி இருக்கிறோம். இந்த சவால்களுக்கு உரிய தீா்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் பேசுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளி நெருக்கடிகள் இன்றி சுதந்திரமாக செயல்படுவதையும், பிரச்னைகளுக்கு சா்வதேச சட்டத்தின் கீழ் தீா்வு காணப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த பிராந்தியத்தில் புதிய சவால்களுக்கு தீா்வு காணப்பட வேண்டியுள்ளது. கூட்டமைப்பின் முந்தைய மாநாடு முடிந்து 6 மாதங்களில், பல சவால்களை வெற்றிகரமா எதிா்கொண்டுள்ளோம்’ என்றாா்.

காலத்துக்கு ஏற்ற வகையில், ஆக்கபூா்வமான கூட்டத்தை நாம் கூட்டியுள்ளோம் என்று ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com