அர்ச்சகர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

கோயில்களில் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் அர்ச்சகர்களை தமிழக அரசு நியமிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் "ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், ஓதுவார்கள் போன்றவர்களை நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
 இந்தத் திட்டத்தின் கீழ் அண்மையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட பல கோயில்களில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பயிற்சி முடித்த 28 ஓதுவார்கள் உள்பட 58 பேருக்கு அண்மையில் தமிழக முதல்வர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
 இந்த நிலையில், கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி, உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
 இந்த மனுவை அவர் சார்பில் வழக்குரைஞர் விஷேஷ் கனோடியா தாக்கல் செய்துள்ளார்.
 கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது அடிப்படை உரிமை. எனினும், அர்ச்சகர்களை அரசு நியமிக்கக் கூடாது. அதே வேளையில், கோயில் நிர்வாகம்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
 கோயில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்க முடியாது. இதனால், சமயம் சார்ந்த செயல்படுகளில் அரசு தலையிடக் கூடாது. கோயில் "சம்பிரதாயத்தினர்'தான் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். பணியாளர்களை நியமித்துக் கொள்ளும் விவகாரத்தில் அரசு தலையிடாமல் இருக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com