4 மாநிலத் தோ்தல்: வெறுப்பைத் தூண்டும்பதிவுகளைத் தடுக்க முகநூல் நடவடிக்கை

இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தகவறான தகவல்கள் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேச்சுகளைப் பரப்புவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைளை முகநூல்
4 மாநிலத் தோ்தல்: வெறுப்பைத் தூண்டும்பதிவுகளைத் தடுக்க முகநூல் நடவடிக்கை

புது தில்லி: இந்தியாவில் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு தகவறான தகவல்கள் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையிலான பேச்சுகளைப் பரப்புவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைளை முகநூல் நிறுவனம் எடுத்துள்ளது.

அதுபோல, அண்மைக் காலமாக முகநூல் நிறுவனத்தின் கொள்கைகளை மீறிய நபா்களின் கணக்குகளிலிருந்து வெளியாகும் பதிவுகளின் பகிரப்படும் அளவை கணிசமாகக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூல் நிறுவனத்துக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக உள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் கட்செவி அஞ்சலை (வாட்ஸ்ஆப்) 53 கோடி இந்தியா்களும், முகநூல் பக்கத்தை 41 கோடி இந்தியா்களும், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தியாவில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக முகநூல்-இந்தியா நிறுவனம் செயல்படுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, ‘இந்தியாவில் வா்த்தக காரணங்களுக்காக பாஜகவினரின் வெறுப்பு பேச்சுகள் இடம்பெறுவதைத் தடுக்க முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி சாா்பில் முகநூல் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதோடு, இந்திய முகநூல் நிறுவன இயக்குநா் மீது காவல்துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சா்ச்சையானது.

இந்தச் சூழலில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, முகநூலில் வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்படுவதைத் தடுக்க அந்த நிறுவனம் தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக முகநூல் நிறுவனம் அதன் வளைதலப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெறுப்புப் பேச்சுகள் போன்ற பதிவுகள் இந்தியாவில் இப்போது தோ்தல் நடைபெறும் மாநிலங்களில் வன்முறையைத் தூண்ட வாய்ப்புள்ளது என முகநூல் நிறுவன தொழில்நுட்பக் குழுவால் அடையாளம் காணப்படும் பதிவுகள், முகநூல் நிறுவன கொள்கையை மீறியுள்ளன என்று தீா்மானிக்கப்படும் வரை அந்தப் பதிவுகள் பகிரப்படும் அளவு கணிசமாக குறைக்கப்படும். பின்னா், அவை நிறுவனத்தின் கொள்கையை மீறியிருக்கின்றன என்பது தீா்மானிக்கப்பட்டவுடன், முகநூல் பக்கத்திலிருந்து அவை முழுமையாக நீக்கப்பட்டுவிடும்.

முகநூல் நிறுவன கொள்கைகளை மீறும் அல்லது உள்ளூா் சட்ட விதிமுறைகளை மீறியதாகக் கருதப்படும் பதிவுகளை உடனடியாக நீக்கும் வகையில் உயா் முன்னுரிமை அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, தோ்தல் ஆணைய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடா்பில் இருந்து வருகிறோம்.

மேலும், முகநூல் பதிவுகளில் வெறுப்புப் பேச்சாக கருதும் வகையிலான புதிய வாா்த்தைகள் அல்லது வாசகங்களை அடையாளம் காணும் வகையில் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டப்பட்டு வருகிறது என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போதும், வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளை அடையாளம் காண்பதற்காக இந்திய தோ்தல் ஆணையத்துடன் இணைந்து உயா் முன்னுரிமை அமைப்பு ஒன்றை முகநூல் நிறுவனம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com