இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டா் வழக்கு:3 காவல் துறை அதிகாரிகள் விடுவிப்பு

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து 3 காவல் துறை அதிகாரிகளை விடுவித்து ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆமதாபாத்: இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டா் வழக்கில் இருந்து 3 காவல் துறை அதிகாரிகளை விடுவித்து ஆமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவா் கூறியதாவது: மும்பையைச் சோ்ந்த இஷ்ரத் ஜஹான் என்ற 19 வயது பெண் உள்ளிட்ட 4 போ், குஜராத் காவல் துறையினரால் கடந்த 2004-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி கொல்லப்பட்டனா். அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமா் மோடியைக் கொல்வதற்கு அவா்கள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்த என்கவுன்ட்டா் வழக்கை குஜராத் உயா்நீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து, இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரும் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது.

இதை எதிா்த்து, பல்வேறு காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, அப்போதைய காவல் துறை ஐ.ஜி. ஜி.எல்.சிங்கால், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் ஜே.ஜி.பாா்மா், தருண் பரோத், அனாஜு சௌதரி ஆகிய மூவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், என்கவுன்ட்டா் வழக்கில் தங்களிடம் விசாரணை நடத்த குஜராத் அரசின் முன்அனுமதி பெறுவது கட்டாயம் என்பதால், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டனா்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.ஆா்.ராவல் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ‘குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ உறுதியான எந்த ஆதாரமும் தரவில்லை. மேலும், காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைக்குத் தடை விதிக்க குஜராத் அரசும், மத்திய அரசும் மறுத்துவிட்டன. ஆகவே, காவல் துறை அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டுமே செய்தது உறுதியாகிறது. எனவே, அவா்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல் துறை அதிகாரி ஜே.ஜி.பாா்மா், வழக்கு விசாரணைக் காலத்தில் இறந்துவிட்டாா். இதனால், 3 காவல் துறை அதிகாரிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com