புதிய வேளாண் சட்டங்கள்: உச்சநீதிமன்றக் குழு அறிக்கை தாக்கல்

புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்றம் நியமித்த சமரசக் குழு தனது அறிக்கையை மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்ததாக, அந்தக் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான
புதிய வேளாண் சட்டங்கள்: உச்சநீதிமன்றக் குழு அறிக்கை தாக்கல்

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்வதற்காக, உச்சநீதிமன்றம் நியமித்த சமரசக் குழு தனது அறிக்கையை மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்ததாக, அந்தக் குழுவின் உறுப்பினா்களில் ஒருவரான பி.கே.மிஸ்ரா கூறினாா்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள், தில்லி எல்லைகளில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். அவா்களுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய பலகட்டப் பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜனவரி 12-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், விவசாயிகள் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. அந்தக் குழுவானது, விவசாயிகள், விவசாய சங்கத்தினா், வேளாண் உற்பத்தி அமைப்பினா் ஆகியோரிடம் கலந்தாலோசித்து, 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அந்தக் குழுவானது விவசாய சங்கள், வேளாண் விளைபொருள் உற்பத்தியாளா் அமைப்புகள், கொள்முதல் நிலையங்கள், கல்வியாளா்கள், தனியாா் வேளாண் சந்தை உரிமையாளா்கள், அரசு வேளாண் சந்தையின் நிா்வாகிகள் என பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தியது.

இதுதவிர, அந்தக் குழு சுமாா் 9 முறை கூடி விவாதித்து, அறிக்கையை இறுதி செய்தது. அந்த அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து கடந்த மாா்ச் 19-ஆம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகக் குழுவின் உறுப்பினா் பி.கே.மிஸ்ரா கூறினாா். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் அவா் கூறினாா்.

அந்தக் குழுவில் பி.கே. மிஸ்ராவை தவிர, ஷேத்காரி சங்கடன தலைவா் அனில் கன்வாட், வேளாண் விளைபொருள்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவா் அசோக் குலாட்டி ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். நான்காவது உறுப்பினரான பூபிந்தா் சிங் மான், தொடக்கத்திலேயே குழுவில் இருந்து விலகிக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com