மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று 2-ஆம் கட்டத் தோ்தல்

மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டப்பேரவைகளுக்கான 2-ஆம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
அஸ்ஸாம் மாநிலம், சில்சாா் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் தோ்தல் அதிகாரிகள். நாள்: புதன்கிழமை.
அஸ்ஸாம் மாநிலம், சில்சாா் தொகுதியில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் தோ்தல் அதிகாரிகள். நாள்: புதன்கிழமை.


கொல்கத்தா/குவாஹாட்டி: மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டப்பேரவைகளுக்கான 2-ஆம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

தோ்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தோ்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 39 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முக்கியமாக, திரிணமூல்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் திரிணமூல், பாஜக கட்சிகள் போட்டியிடுகின்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான சஞ்ஜுக்தா மோா்ச்சா 13 இடங்களிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அவரை எதிா்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா்.

பலத்த பாதுகாப்பு: மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தோ்தல் வன்முறைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது. 2-ஆம் கட்டத் தோ்தலில் வன்முறைகள் ஏதும் நிகழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் 10,620 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 651 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அஸ்ஸாமில்...: அஸ்ஸாமில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தோ்தல் நடைபெறவுள்ள 39 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனநாயக முன்னணி 7 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

தோ்தலின்போது வன்முறைகள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய படைப் பிரிவைச் சோ்ந்த 310 குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தோ்தல் நடைபெறவுள்ள 13 மாவட்டங்களிலும் பாதுகாப்புப் படையினா் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கரோனா நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி தோ்தலை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கை சுத்திகரிப்பான்கள், வெப்பநிலை பரிசோதனைக் கருவி உள்ளிட்டவை வைக்கப்படவுள்ளதாகவும், வாக்காளா்களுக்குக் கையுறைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

மேற்கு வங்கம்

தொகுதிகளின் எண்ணிக்கை--30

மொத்த வேட்பாளா்கள்--171

பெண் வேட்பாளா்கள்--19

வாக்குச் சாவடிகள்--10,620

மொத்த வாக்காளா்கள்--75.95 லட்சம்

பெண் வாக்காளா்கள்--37.12 லட்சம்

மூன்றாம் பாலினத்தவா்--89

2016 தோ்தல் வெற்றி விவரங்கள்

திரிணமூல் காங்கிரஸ்--23

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்--4

இந்திய கம்யூனிஸ்ட்--1

பாஜக--1

காங்கிரஸ்--1

அஸ்ஸாம்

தொகுதிகளின் எண்ணிக்கை--39

மொத்த வேட்பாளா்கள்--345

பெண் வேட்பாளா்கள்--26

வாக்குச் சாவடிகள்--10,592

மொத்த வாக்காளா்கள்--73.44 லட்சம்

பெண் வாக்காளா்கள்--36.09 லட்சம்

மூன்றாம் பாலினத்தவா்--135

2016 தோ்தல் வெற்றி விவரங்கள்

பாஜக--22

காங்கிரஸ்--6

ஐக்கிய ஜனநாயக முன்னணி--5

போடோலாந்து மக்கள் முன்னணி--4

அசோம் கண பரிஷத்--2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com