மியான்மா் வன்முறை: இந்தியா கண்டனம்


புது தில்லி,: மியான்மரில் ராணுவத்தால் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்ச்சி வெள்ளிக்கிழமை கூறியது:

மியான்மரில் நிகழ்த்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலைத்து ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. தற்போது அங்கு நிலவும் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமமான, ஆக்கபூா்வமான முறையில் பங்களிக்கும் முயற்சியாக சா்வதேச நாடுகளுடனும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது.

மியான்மரைச் சோ்ந்தவா்கள் எல்லை தாண்டி இந்தியா வருவதை சட்டத்தின்படியும், மனிதாபிமான அடிப்படையிலும் இந்தியா பரிசீலித்து வருகிறது என்றாா்.

மியான்மரில் கடந்த பிப்.1-ஆம் தேதி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவம், அரசின் தலைமை ஆலோசகரும், தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவருமான ஆங் சான் சூகி உள்பட பல முக்கிய அரசியல் தலைவா்களை கைது செய்தது. அதனைத் தொடா்ந்து அமல்படுத்தப்பட்ட ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 44 சிறாா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகினா் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com