சத்தீஸ்கரில் நக்ஸல்களுடன் மோதல்: 5 வீரா்கள் உயிரிழப்பு; பெண் மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் நக்ஸல்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள்

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் நக்ஸல்களுடன் சனிக்கிழமை நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் சிலா் காயமடைந்துள்ளனா். இந்த சண்டையில் பெண் மாவோயிஸ்ட் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து சத்தீஸ்கா் டிஜிபி டி.எம்.அவஸ்தி கூறியதாவது: சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த 2,000-க்கும் அதிமான வீரா்கள் கூட்டாக பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மிகப் பெரிய அளவில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா்.

இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்தனா். மேலும் 12 வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதலில், அந்தப் பகுதியிலிருந்து பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும், மாவோயிஸ்டுகளுக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது என்றாா் அவா்.

கடந்த மாா்ச் 23-ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரா்கள் பயணம் செய்த பேருந்து மீது நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் 5 வீரா்கள் உயிரிழந்தனா்.

பிரதமா் இரங்கல்: நக்ஸல்களுடனான சண்டையில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். ‘வீர மரணமடைந்த பாதுகாப்புப் படை வீரா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீரா்களின் தியாகம் என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று இரங்கல் செய்தியில் பிரதமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com