லஞ்ச விவகாரத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவு:உச்சநீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் மனு

காவல்துறை அதிகாரிகளை மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வலியுறுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

காவல்துறை அதிகாரிகளை மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வலியுறுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாா்கள், உணவகங்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் அண்மையில் குற்றம்சாட்டினாா். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் பரம்வீா் சிங் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்கவும், 15 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து தனது அமைச்சா் பதவியை அனில் தேஷ்முக் ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில் மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அனில் தேஷ்முக் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில் அவா் கூறியுள்ளதாவது:

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்பியுள்ளது. அந்தப் பிரச்னைகள் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, ஆட்சிமுறை, எந்த விசாரணை அமைப்புகள் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்பதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எந்தவொரு வழக்கையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியுமென்ற நிலையில், அதற்கு மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் அந்த ஒப்புதலை மகாராஷ்டிர அரசு திரும்பப் பெற்றுவிட்டது. எனவே மகாராஷ்டிரத்தில் மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்தவொரு வழக்கையும் சிபிஐ விசாரிக்க முடியாது. இதனை நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும். எனவே மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மனு மீது எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் முன்னா் தனது தரப்பையும் கேட்க வேண்டுமென மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த மனுதாரா்களில் ஒருவரான வழக்குரைஞா் ஜெய்ஸ்ரீ பாட்டீல் என்பவா் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

மும்பை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசும் மனு தாக்கல் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com