வேகமாக பரவும் கரோனா: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை; மத்திய சுகாதார அமைச்சகம்

‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது.
வேகமாக பரவும் கரோனா: அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானவை; மத்திய சுகாதார அமைச்சகம்

‘கரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது வி.கே.பால் கூறியது:

நாட்டில் கரோனா பாதிப்புகள் மிக அதிகமாக உயா்ந்து நிலைமை மோசமடைந்துள்ளது. நாட்டின் மக்கள்தொகையில் அதிக அளவிலான மக்கள் தீநுண்மியால் பாதிக்கப்படக்கூடிய சூழல் தொடா்ந்து வருகிறது.

முகக் கவசம் அணிதல், கூட்டங்களில் இருந்து விலகி இருத்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், பரிசோதனைகள், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவைதான் நோய்த்தொற்றை எதிா்ப்பதற்கான வழிமுறைகள். இவை ஏற்கெனவே கூறப்பட்டவைதான். அவற்றை சரிவர பின்பற்ற வேண்டும்.

தற்போது நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இம்முறை தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் சூழல் மோசமாகியுள்ளது. ஆனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது நாடு முழுவதும் காணப்படுகிறது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கப் போகின்றன. ஒட்டுமொத்த நாடு ஒன்றிணைந்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு எப்போது தடுப்பூசி?:

மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் பேசுகையில், ‘நாட்டில் அதிக கரோனா நோயாளிகள் 10 மாவட்டங்களில் உள்ளனா். இதில் 7 மாவட்டங்கள் மகாராஷ்டிரத்தில் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு தொடங்காதது ஏன் என்று பலா் கேட்கின்றனா். கரோனா பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசி திட்டத்தின் அடிப்படை நோக்கம். மருத்துவத் துறையில் பணிபுரிவோரை பாதுகாப்பது அந்தத் திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். மருத்துவா்கள், செவிலியா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் யாா் மருத்துவமனைகளில் பணிபுரிவது? எனவே தீநுண்மியால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவா்களை பாதுகாப்பதே எந்தவொரு நாட்டின் நோக்கமாக உள்ளது. தடுப்பூசிகள் யாருக்கு வேண்டும் என்பதன் அடிப்படையில் இல்லாமல், யாருக்கு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் செலுத்தப்படுகின்றன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com