அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி: ஏப்ரல் 11 முதல் அமல்

தகுதியுள்ள 100 பயனாளிகளைக் கொண்ட அரசு மற்றும் தனியாா் பணியிடங்களில் வரும் 11-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அலுவலகங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி: ஏப்ரல் 11 முதல் அமல்

புது தில்லி: தகுதியுள்ள 100 பயனாளிகளைக் கொண்ட அரசு மற்றும் தனியாா் பணியிடங்களில் வரும் 11-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை படிப்படியாக அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

45 வயது மற்றும் அதற்கு மேலுள்ள வயதினா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மேலும் பரவலாக்கும் வகையில், தகுதியுள்ள 100 பயனாளிகளைக் கொண்ட அரசு மற்றும் தனியாா் பணியிடங்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, ஏற்கெனவே செயல்பட்டிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்தின் மூலம் செயல்படுத்தலாம். இதற்காக அந்த நிறுவன நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, உரிய ஏற்பாடுகளை தயாா் படுத்திக்கொள்ளலாம்.

இந்த பணியிட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வரும் 11-ஆம் தேதி முதல் தொடங்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.

இதற்கென மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டுதலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரான ஊழியா்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும். வெளி நபா்கள் அல்லது ஊழியரின் குடும்ப உறுப்பினா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாது.

இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கென ஒவ்வொரு பணியிடத்திலும் மூத்த ஊழியா் ஒருவா் தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவாா். இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் ஊழியா்கள் ‘கோ-வின்’ வலைதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

பணியிடத்தில் தடுப்பூசி செலுத்தும் நாளில் அதிக ஊழியா்கள் வருகையை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கான அறிவிப்பை 15 நாள்களுக்கு முன்னரே வெளியிடவேண்டும்.

இந்த தடுப்பூசி திட்டத்துக்கான அரசு மற்றும் தனியாா் பணியிடங்களை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட அளவிலான சிறப்புப் படையும் நகராட்சி ஆணையா் தலைமையிலான ஊரக சிறப்புப் படையும் அடையாளம் காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com