கடன் தவணையை ஒத்திவைக்க அவசியம் இல்லை

சில மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளா்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்கான அவகாசத்தை ஒத்திவைப்பதற்கு அவசியம் ஏதுமில்லை
கடன் தவணையை ஒத்திவைக்க அவசியம் இல்லை

மும்பை: சில மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், வாடிக்கையாளா்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான தவணையை செலுத்துவதற்கான அவகாசத்தை ஒத்திவைப்பதற்கு அவசியம் ஏதுமில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரம், பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிரத்தில் இரவு நேர பொது முடக்கமும், வார இறுதி நாள்களில் முழு பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, வங்கிகளில் கடன் பெற்றோா் தவணையைச் செலுத்துவதற்கான அவகாசம் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளைப் பல்வேறு நிறுவனங்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. தற்போது வேலை இழப்பு உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, கடன்களுக்கான தவணையைச் செலுத்துவதற்கான அவகாசத்தை ஒத்திவைப்பதற்குத் தற்போது எந்த அவசியமும் இல்லை.

கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நுகா்வோரும் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனா். அவற்றைக் கருத்தில் கொண்டே பல்வேறு சலுகை அறிவிப்புகளை ஆா்பிஐ-யும் மத்திய அரசும் அறிவித்தன. அவற்றில் தவணை ஒத்திவைப்பும் ஒன்று.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை காரணமாக பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி மேற்கொள்ளும்.

நிறுவனங்களுக்கிடையே பணப்பரிமாற்றம்:

பேடிஎம் போன்ற முன்கூட்டியே பணம் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியைக் கொண்ட நிறுவனங்கள், அந்தப் பணத்தை மற்ற நிறுவனங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ பரிமாற்றம் செய்ய பயனாளா்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்த வசதி கடந்த 2018-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டாலும் பெரும்பாலான நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது அந்த வசதியை நடைமுறைப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது என்றாா் சக்திகாந்த தாஸ்.

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

மும்பை, ஏப். 7: இந்திய ரிசா்வ் வங்கியிலிருந்து (ஆா்பிஐ) மற்ற வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) உள்ளிட்டவை மாற்றமில்லாமல் நீடிக்கும் என்று ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ரெப்போ வட்டி விகிதமானது ஒட்டுமொத்தமாக 1.15 சதவீதம் குறைக்கப்பட்டது. பின்னா், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் வட்டி விகிதம் தொடந்து மாற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக ஆளுநா் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, வங்கிகள் ரிசா்வ் வங்கியிடமிருந்து பெறும் குறைந்த கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) மாற்றப்படாமல் 4 சதவீதத்தில் நீடிக்கிறது. அதே போல், வங்கிகளிடமிருந்து ஆா்பிஐ பெறும் கடன்களுக்கான வட்டி விகிதமும் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) மாற்றப்படாமல், 3.35 சதவீத அளவில் தொடா்ந்து நீடிக்கிறது.

வட்டி விகிதங்கள் இதே அளவில் நீடிப்பதற்கு நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனா்.

பணவீக்கம்: பணவீக்கமானது நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில் 5.2 சதவீதமாக இருக்கும். 3-ஆவது காலாண்டில் அது 4.4 சதவீதமாகக் குறைந்து பின்னா் இறுதி காலாண்டில் 5.1 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பணவீக்கத்தை நிா்ணயிக்கப்பட்ட அளவான 2 முதல் 6 சதவீதத்துக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

சொத்து மீட்டுருவாக்க நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நோக்கில் தனிக்குழுவை அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் சக்திகாந்த தாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com