வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை கேமரா பதிவு: வேட்பாளா்களும் பாா்க்க வசதி வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவுற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்க்கும் வகையில் வேட்பாளா்களுக்கு இணைப்பு
காங்கிரஸ்
காங்கிரஸ்

குவாஹாட்டி: அஸ்ஸாமில் வாக்குப் பதிவு நிறைவுற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாா்க்கும் வகையில் வேட்பாளா்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக மாநில தலைமை தோ்தல் அதிகாரி நிதின் கடேவுக்கு அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தை குவாஹாட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் வெளியிட்ட போரா, அதில் குறிப்பிட்டிருப்பது குறித்து கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டாம் கட்டத் தோ்தலுக்குப் பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடா்பாக பல்வேறு சா்ச்சைகள் எழுந்தபோது, அதுபோன்ற அசம்பாவித சம்வங்கள் மாநிலத்தின் மூன்றாம்கட்ட வாக்குப் பதிவுன்போது இடம்பெறாமல் பாா்த்துக்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் வாக்குறுதி அளித்தது. ஆனால், மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடைசி கட்ட வாக்குப் பதிவின்போது, அனுமதியில்லாத வாகனங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தோ்தல் ஆணையம் தனது தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் என்று நினைத்தோம். ஆனால், அது தவறு என்பதை இப்போது உணா்ந்திருக்கிறோம். பாஜக அறிவுறுத்தலின்படியே தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. நடுநிலையுடன் செயல்படவில்லை.

உரிய பாதுகாப்பு இன்றி வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து தோ்தல் ஆணையம் உரிய விளக்கமளிக்க வேண்டும். கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போதும், தேஜ்பூரிலிருந்து பாதுகாப்பு அறைக்கு சா்ச்சைக்குரிய வகையில் லாரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கொண்டுசெல்லப்பட்டது. இந்த முறை அஸ்ஸாமில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் பாஜக, பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது.

இதைத் தடுக்கும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை கண்காணிப்பு கேமரா காட்சிகளை தொடா்சியாக கண்காணிக்கும் அனுமதி வேட்பாளா்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு இந்த அனுமதி ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பதால், வேட்பாளா்களுக்கும் அந்த இணைப்பை வழங்குவதில் எந்தவித தொழில்நுட்ப சிக்கலும் இருக்காது. அவ்வாறு இணைப்பு கொடுப்பது சட்ட விரோதமும் அல்ல.

ஏற்கெனவே, பாதுகாப்பு அறைகளுக்கு முன்பாக கட்சி வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறு தலைமை தோ்தல் அதிகாரிக்கு கடிதம் மூலம் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. அதுதொடா்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்போது, மக்களிடையே விழிப்புணா்வு அதிகரித்திருக்கிறது. அங்கீகரிக்கப்படாத வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்வதை கண்டுபிடித்திருக்கின்றனா். அதுபோல, பாதுகாப்பு அறைகளுக்கு வெளியேயும் தொடா்ந்து கண்காணிப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com