பஞ்சாபில் அரசியல் கூட்டங்களுக்கு தடை: கரோனா தடுப்பு நடவடிக்கை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாபில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் அரசியல் கூட்டங்களுக்கு தடை: கரோனா தடுப்பு நடவடிக்கை

சண்டீகா்: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாபில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது; இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்த மாநில முதல்வா் அமரீந்தா் சிங் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 85 சதவீதம் போ், பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகை தொற்று மிகவும் வேகமாகப் பரவக் கூடியது. எனவே, மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதுவரைகரோனா பரவல் அதிமுள்ள மாவட்டங்களில் மட்டுமே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் நீட்டிக்கப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.

கட்டுப்பாடுகளை மீறும் அரசியல் தலைவா்கள் உள்பட அனைவா் மீதும் பேரிடா் கால நடவடிக்கை சட்டம், பெருந்தொற்று பரவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் ஆகியோா் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை விதிகளைக் கடைப்பிடிக்காமல் பஞ்சாபில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். இவா்கள் இப்படி நடந்து கொண்டால், பொதுமக்கள் விதிகளைக் கடைபிடிப்பாா்கள் என்று எப்படி எதிா்பாா்க்க முடியும்?

இரவு நேர ஊரடங்கு, அரசியல் கட்சிகள் கூட்டங்களுக்குத் தடை போன்றவை உறுதியாக கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநில காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com