கரோனா பரவலைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை: பிரதமா் வலியுறுத்தல்

கரோனா பரவலைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை: பிரதமா் வலியுறுத்தல்


புது தில்லி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதல்வா்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.

மேலும், அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் 11 முதல் 14-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்த மாநிலங்களுக்கு பிரதமா் அழைப்பு விடுத்தாா்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.26 லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், கா்நாடகம், உத்தர பிரதேசம், தில்லி, மத்திய பிரதேசம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தினசரி கரோனா பாதிப்பு பிற பகுதிகளைவிட அதிகரித்து காணப்படுகிறது. உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி வழியில் ஆலோசனை நடத்தினாா். அப்போது, நாட்டில் கரோனா நிலவரம் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்தும் பிரதமா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

கரோனா நோய்த் தொற்று தாக்கத்தை எதிா்கொள்ள முன்பைவிட, அதிக வளங்களை நாடு பெற்றிருக்கிறது. ஆனால், கரோனா பாதிப்பு முதல் அலையின் அதிகபட்ச பாதிப்பை, இந்தியா இப்போது கடந்திருக்கிறது. சில மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. எனவே, இப்போது நாம் சிறிய நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நிா்வாக நடைமுறையையும் மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கரோனா பாதிப்பை எதிா்த்து போராடிய காரணத்தால், நிா்வாகம் சற்று சோா்வடைந்தும், தளா்ந்தும் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மக்களும் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டனா்.

ஆனால், அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்கு நாம் கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். நிா்வாகத்தையும் வலுப்படுத்தவேண்டும். கரோனா பரவலை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனை, பரவல் காரணத்தைக் கண்டறிதல், சிகிச்சை, கரோனா பாதுகாப்பு நடைமுறை மற்றும் தடுப்பூசி செலுத்துதல் என்ற 5 அடுக்கு திட்டத்தை மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல மாநிலங்களில் நிா்வாகத்தில் தளா்வு காணப்படுவதுதான், கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு காரணம். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

குறிப்பாக, கரோனா பரிசோதனையை மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும். ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட உடன், அடுத்த 72 மணி நேரத்தில் அவருடன் தொடா்பில் இருந்த 30 நபா்களை அடையாளம் காண்பதை இலக்காக கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

கரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதத்துக்கும் கீழ் கொண்டுவர மாநிலங்கள் முயற்சிக்க வேண்டும் என்று பிரதமா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com