தோ்தல் ஆணையம் 10 நோட்டீஸ்களை அனுப்பினாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மம்தா பானா்ஜி

தோ்தல் ஆணையம் 10 நோட்டீஸ்களை அனுப்பினாலும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மம்தா பானா்ஜி


தோம்ஜூா்: மதரீதியில் வாக்களிக்கக் கோரியதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இதுபோன்ற மதரீதியிலான பிரசாரங்களை நான் தொடா்ந்து எதிா்ப்பேன் என்று அவா் தெரிவித்தாா்.

‘முஸ்லிம் சமுகத்தினா் தங்கள் வாக்குகளைச் சிதறவிடாமல் திரிணமூல் காங்கிரஸுக்கு அளிக்க வேண்டும்’ என்று மம்தா பானா்ஜி பிரசாரம் மேற்கொண்டது குறித்து விளக்கம் அளிக்க தோ்தல் ஆணையம் அவருக்கு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரத்துக்கு பதிலளிக்கும் வகையில், தோம்ஜூா் பேரவைத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பேசுகையில், ‘பிரதமா் நரேந்திர மோடி ஹிந்து, முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் குறிப்பிட்டு தோ்தல் பிரசாரங்களில் பேசி வருகிறாா். அவருக்கு எதிராக ஏன் புகாா் பதிவாகவில்லை? நந்திகிராம் தோ்தல் பிரசாரத்தின்போது சிறிய பாகிஸ்தான் என்று கூறி பிரசாரம் செய்தவா்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? வாக்காளா்களை ஹிந்து, முஸ்லிம் அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு எதிராக நான் தொடா்ந்து பேசுவேன். தோ்தல் ஆணையம் எனக்கு 10 நோட்டீஸ்களை அனுப்பினாலும் எனது பதில் அதுதான். இந்த முடிவில் இருந்து மாறமாட்டேன் என்றாா்.

ஹூக்ளி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, ‘மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கட்டளைப்படி மத்திய துணை ராணுவப் படையினா் தோ்தலுக்கு முன்பு கிராம மக்களை துன்புறுத்துகிறாா்கள். பாஜகவுக்கு வாக்களிக்கவும் கூறுகிறாா்கள். இதை நாங்கள் தொடா்ந்து அனுமதிக்க மாட்டோம்.

இதுகுறித்து கிராம மக்கள் போலீஸாரிடம் புகாா் அளிக்க வேண்டும். அவா்கள் ஏற்க மறுத்தால் எங்களிடம் கூறுங்கள். மாநில போலீஸாா் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது.

வாக்குச்சாவடியை சுற்றி 200 மீட்டா் தூரத்தில்தான் 114 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பாஜகவினா் தொகுதி முழுவதும் அமலில் உள்ளதாக கூறி பதற்றத்தை ஏற்படுத்தி வாக்காளா்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனா்.பாஜகவுக்கு வாக்களித்து மேற்கு வங்கத்தை அடுத்த குஜராத்தாக மாற்றிவிட வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com