வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைவிட்டு, அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை விட்டுவிட்டு, உள்நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெளிநாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை விட்டுவிட்டு, உள்நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மீண்டும் அதிா்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலை என்பது இளைஞா்களை அதிகம் பாதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை நிறுத்தி உள்நாட்டில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மருந்து உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். தற்போது போதுமான அளவு தடுப்பூசி கை வசம் இல்லை என்ற செய்தி அதிா்ச்சியளிப்பதாக உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களின் ஒரு பகுதியினருக்கு இருக்கும் தயக்கத்தை போக்க உரிய விழிப்புணா்வு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோதும் மதுபானக் கடைகளுக்கு மட்டும் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக கரோனா தொற்று இரண்டாவது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு அரசின் புதிய கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படுவோா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.

உரங்களின் மொத்த விற்பனை விலை கடந்த ஆண்டை விட 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை கடுமையாக உயா்ந்துள்ளது. இதன் காரணமாக சில்லரை விற்பனை விலையும் 50 கிலோ மூட்டைக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை உயா்ந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகள் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதலாகும். இது கண்டிக்கத்தக்கது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மத்தியக் குழு உறுப்பினா் டி.கே. ரங்கராஜன் தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், அ. சவுந்தரராசன், உ. வாசுகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com