பாஜகவால் 70 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பாஜகவால் 70 தொகுதிகளைக்கூட வெல்ல முடியாது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவால் 70 தொகுதிகளைக்கூட வெல்ல முடியாது என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் நான்கு கட்டத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இதுவரை தேர்தல் நடைபெற்ற இடங்களில் 100 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி இப்போது பேசியுள்ளார்.
ஜல்பைகுரி மாவட்டத்தில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜி பேசியதாவது:
நான்கு கட்டத் தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், அதில் பாஜக 100 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும் என்று பிரதமர் பேசியிருப்பது அபத்தமான கருத்தாகும். மொத்தமுள்ள 294 தொகுதிகளிலும் பாஜகவால் 70 தொகுதிகளில்கூட வெல்ல முடியாது என்பதுதான் உண்மை நிலவரமாகும்.
மேற்கு வங்கத்தின் சில இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அமல்படுத்தப்படமாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஆனால், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பெயரில் 14 லட்சம் பேரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப மத்திய அரசு கணக்கெடுப்பை நடத்தி வைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம். இங்கு வசிக்கும் அனைவரும் நமது குடிமக்கள்தான். மக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்பதுதான் எனது ஒரே கோரிக்கை. கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோரை மேற்கு வங்கத்தில் பாஜக குவித்துள்ளது.
மத்திய பாஜக அரசு சாமானிய மக்களுக்கு எதிரான கொள்கையுடையது. எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com