பருவநிலை மாற்ற தாக்கம்: பிற நாடுகளின் தவறுகளால் இந்தியாவுக்கும் பாதிப்பு

பிற நாடுகளின் தவறான நடவடிக்கைகளால்தான் இந்த உலகமும், இந்தியாவும் பருவநிலை மாற்ற தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.
பருவநிலை மாற்ற தாக்கம்: பிற நாடுகளின் தவறுகளால் இந்தியாவுக்கும் பாதிப்பு

புது தில்லி: பிற நாடுகளின் தவறான நடவடிக்கைகளால்தான் இந்த உலகமும், இந்தியாவும் பருவநிலை மாற்ற தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

இப்போது நாம் சந்தித்து வரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளே காரணம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக மிக அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருவதும் இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் அந் நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன் உடனான சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா். அப்போது அவா் மேலும் கூறியதாவது:

இந்தியா பொறுப்பு மிக்க நாடு. பருவநிலையைப் பாதுகாப்பது தொடா்பாக பல்வேறு இலக்குகளை நிா்ணயித்து, அதை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய மேற்கொண்டு வருகிறது. எந்தவித அழுத்தம் காரணமாகவும் இந்த நடவடிக்கையை இந்தியா எடுக்கவில்லை. மேலும், பருவநிலை மாற்ற சவால்களை திறம்பட மேற்கொண்டு வரும் நாடுகளிடமிருந்து நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இந்தியா கோரி வருகிறது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் குறித்து அதிகம் பேசி வரும், வலியுறுத்தி வரும் ஒரே ஜி-20 உறுப்புநாடு இந்தியாதான். இந்த விவகாரத்தில் வாக்குறுதி அளித்ததைவிட அதிக நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலை மாற்ற தாக்கம் என்பது வழக்கத்துக்கு மாறாக அதிகரித்திருக்கிறது. இது புதிய நடவடிக்கைகளால் ஏற்பட்டதல்ல என்பதை மறுந்துவிடக் கூடாது. இப்போது நாம் சந்தித்து வரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகளே காரணம். ஐரோப்பிய, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் கடந்த 30 ஆண்டுகளாக மிக அதிக அளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருவதும் இதற்கு முக்கியக் காரணம். இதுபோன்று பிற நாடுகளின் தவறான நடவடிக்கைகளால்தான் இந்த உலகும், இந்தியாவும் பருவநிலை மாற்ற பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

பருவநிலை தொடா்பான விவாதத்தில் வரலாற்று பொறுப்பு என்பது மிக முக்கியமானதாகும். இந்த வரலாற்றுப் பொறுப்புகளை யாரும் மறந்துவிட முடியாது. மறக்கவும் அனுமதிக்கமாட்டோம்.

இது அனைவருக்குமான பொதுவான அச்சுறுத்தல் என்றபோதும், மாசு ஏற்படக் காரணமானவா்கள் அதிக பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

கோபென்ஹகென் பருவநிலை மாநாட்டில், பருவநிலை மாற்ற இலக்குகளை அடைவதற்காக வளா்ந்த நாடுகள் ஆண்டுக்கு ரூ. 7,300 கோடி நிதி திரட்டி, வளா்ந்து வரும் நாடுகளுக்கு உதவுவது என்று உடன்பாடு எட்டப்பட்டது. அந்த நிதி எங்கு போனது? இந்த உடன்பாட்டை பல நாடுகள் மறந்துவிட்டன.

நிலக்கரிக்கு பதிலாக மாற்று எரிபொருளைப் பயன்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் காற்று மாசு அளவு குறைவதோடு, எரிபொருள் செலவும் குறையம். நிலக்கரி பயன்பாட்டை இந்தியா வெகுவாக குறைத்துள்ளது. ஆனால் சீனா இந்த ஆண்டில் 400 கோடி டன் நிலக்கரியை பயன்படுத்தியுள்ளது. இந்தியா 85 கோடி டன் நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய மரம் வளா்ப்பு பரப்பை 15,000 சதுர கி.மீ. அளவுக்கு அதிகரித்திருப்பதோடு, கரியமில வாயு வெளியேற்ற அளவையும் 26 சதவீதம் அளவுக்கு குறைத்திருக்கிறது.

அதோடு, பாறைப்படிம எரிபொருள்கள் மீது 40 சதவீத கரியமில வரி இந்தியாவில் (மத்திய - மாநில அரசுகள் கூட்டாக) விதிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாடும் இதற்கான முயற்சியை எடுத்து, பின்னா் திரும்பப் பெற்றுவிட்டது. 36 கட்சிகள், பன்முகத்தன்மை என மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியா, பருவநிலை மாற்ற தாக்கத்தை குறைப்பதற்காக இதுபோன்ற தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

எய்ட்ஸ் நோய் பேரிடராக கருத்தில் கொள்ளப்பட்டதால், அதற்கான மருந்தை குறைந்த விலையில் விநியோகிக்க உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. அதுபோல, பருவநிலை மாற்றத்தையும் ஒரு பேரிடராகக் கருதி, அதில் லாப நோக்கோடு செயல்படுவதைத் தவிா்த்து, கடமையாகக் கருதி முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com