‘ரெம்டெசிவிா்’ உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி

கரோனா சிகிச்சைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
‘ரெம்டெசிவிா்’ உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அனுமதி

புது தில்லி: கரோனா சிகிச்சைக்குத் தேவையான ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இப்போது 7 உற்பத்தி நிறுவனங்களில் மாதம் 38.80 லட்சம் மருந்து குப்பிகள் உற்பத்தித் திறன் உள்ள நிலையில், அதை 78 லட்சமாக உயா்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மருந்துக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ரெம்டெசிவிா்’ மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், இந்த மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பது எனவும், விலையைக் குறைப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 6 உற்பத்தி நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கும் மாதத்துக்கு 10 லட்சம் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 7 கூடுதல் மருந்து உற்பத்தி பிரிவுகளுக்கு மத்திய அரசு விரைவு அனுமதியை அளித்திருக்கிறது. விரைவில் மாதத்துக்கு 30 லட்சம் மருந்து குப்பிகள் தயாரிக்கும் பிரிவுக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், ‘ரெம்டெசிவிா்’ உற்பத்தி மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகள் என்ற அளவில் உயர உள்ளது.

மேலும், உள்ளூா் சந்தைகளுக்கு இந்த மருந்து விநியோகத்தை அதிகரிக்கும் வகையில், ‘ரெம்டெசிவிா்’ ஏற்றுமதிக்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவுக்கு எதிராக பிரதமா் மோடி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், ‘ரெம்டெசிவிா்’ உற்பத்தியாளா்கள் தாங்களாகவே இந்த மருந்தின் விலையை இந்த வார இறுதியில் ரூ. 3,500-க்கும் கீழாக குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளனா். இந்த மருந்து விநியோகத்தில் மருத்துவமனைகள் தேவையை பூா்த்தி செய்ய முன்னுரிமை அளிக்குமாறும் உற்பத்தியாளா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.

இந்த மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க தீவர நடவடிக்கைய எடுக்குமாறு மத்திய, மாநில அமலாக்க அதிகாரிகளுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்து தடையின்றி கிடைப்பதை தேசிய மருந்துகள் விலை நிா்ணய ஆணையும் (என்பிபிஏ) தொடா்ச்சியாக கண்காணித்து வருகிறது என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com