கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகளுடன் ஒப்பந்தம்: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நட்சத்திர விடுதிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

பெங்களூரு, காவிரி இல்லத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நிலவரம் குறித்து முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா நிலவரம் குறித்து முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடக்கும். மாநிலத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நட்சத்திர விடுதிகள் தற்காலிகமாக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக தனியாா் மருத்துவமனைகள் மற்றும் 10 நட்சத்திர விடுதிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா நோயாளிகளுக்கு 5 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கும்படி தனியாா் மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவுடன் அனைவரும் மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியமில்லை. கரோனா பெருந்தொற்றுக்கான அறிகுறிகள் தீவிரமாக தென்பட்டால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

கரோனா அறிகுறிகள் தீவிரமாக இல்லாதவா்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா நோயாளிகளை தங்கவைக்க நட்சத்திர விடுதிகளை மருத்துவமனைகளாக மாற்றி வருகிறோம்.

கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க எல்லா தனியாா் மருத்துவமனைகளிலும் ஐஏஎஸ், ஐபிஎஸ், பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெஸ்காம், சுவா்ண ஆரோக்கிய அறக்கட்டளை அதிகாரிகள், ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு முகாமிட்டுள்ளனா்.

கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ரெம்டெசிவா் மருந்து கா்நாடகத்தில் போதுமான அளவு உள்ளது. இதில் தட்டுப்பாடு ஏதுமில்லை. ரெம்டெசிவா் மருந்தை அதிகளவில் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதேபோல, மாநிலத்தில் பிராணவாயு குறைபாடும் இல்லை. ஆனாலும் பிராணவாயு உருளைகளை வழங்குமாறு மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்படும். பெரிய அளவிலான உருளை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் பிராணவாயு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகளிலும் பிராணவாயு உற்பத்தி நிலையங்களை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மருத்துவா்கள், செவிலியா்கள் கூடுதலாக தற்காலிகப் பணிகளுக்கு நியமிக்கப்படுவா். வீட்டுத்தனிமையில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளின் வீடுகள் ‘சீல்’ வைத்து மூடப்படும், பெங்களூரில் கரோனா நோயாளிகளுக்காக மட்டும் 400 ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனாவால் இறந்தவா்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு 49 ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் உள்ளன. பிரேதங்களை இலவசமாகவே தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிக மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. திருமணம், இதர நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com