இந்தியாவிலிருந்து பரவும் உருமாறிய கரோனா: பிரிட்டன் சுகாதாரத் துறை அறிக்கை

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 77 பேருக்கு இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட வேகமாக பரவும் ‘புதிய பி.1.617’ கரோனா தொற்று இருப்பதை அந் நாட்டு சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.

பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 77 பேருக்கு இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட வேகமாக பரவும் ‘புதிய பி.1.617’ கரோனா தொற்று இருப்பதை அந் நாட்டு சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.

பிரிட்டன் பொது சுகாதாரத் துறை ஒவ்வொரு வாரமும் வெளியிடும் கரோனா தொற்று தொடா்பான அறிக்கையில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உருமாறிய கரோனா பாதிப்பு (விஓசி) மற்றும் ஆய்வின் கீழ் உள்ள உருமாறிய கரோனா பாதிப்பு (வியுஐ) என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் புதிய கரோனா பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்றை, வியுஐ பிரிவின் கீழ் பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டிருக்கும் பி.1.617 உருமாறிய கரோனா பாதிப்பு வியுஐ பிரிவின் கீழ் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி குறிப்பிடப்பட்டது. 77 பேருக்கு இந்த புதிய நோய்த்தொற்று பாதிப்பு இருப்பதை பிரிட்டன் பொது சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் உள்பட அனைத்துவிதமான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நிலைமை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா இன்னும் பயணம் செய்யக்கூடாத நாடுகளுக்கான சிவப்புப் பட்டியலில் வைக்கப்படவில்லை. ஒருவேளை, பிரிட்டனில் பி.1.617 உருமாறிய கரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டால், இந்தியாவை உருமாறிய கரோனா பரவல் பிரச்னை உள்ள நாடு என குறிப்பிட வேண்டி வரும்.

நோய்த்தொற்று வேகமாக பரவுவதைத் தடுக்க கைகளை அவ்வப்போது கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது இடங்களில் கூடுவதை தவிா்ப்பது உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதே சிறந்த வழி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதற்கு இந்தப் புதிய உருமாறிய பி.1.617 கரோனா நோய்த்தொற்றே காரணம் என்று நம்பப்படுகிறது. இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்பதோடு, நோய் எதிா்ப்பு சக்தியையும் குறைக்கும் திறனுடையதாக உள்ளது.

இந்தப் பாதிப்பு, இம்மாத இறுதியில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ள இருந்த இந்திய சுற்றுப் பயண நாள்களை குறைத்துவிட்டது. இப்போது ஏப்ரல் 26-ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமரின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் பிரதமரின் சுற்றுப்பயணம் குறித்து இந்திய அரசுடன் தொடா்ந்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆலோசனைகளில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பிரதமா் தனது நீண்ட சுற்றுப்பயணத்தை சுறுக்கிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com