ரயில் சேவையை நிறுத்துமாறு எந்த மாநில அரசும் கோரவில்லை: ரயில்வே வாரியம்

ரயில் சேவையை நிறுத்துமாறு எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என்று ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் சேவையை நிறுத்துமாறு எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என்று ரயில்வே வாரியத் தலைவா் சுனீத் சா்மா தெரிவித்தாா்.

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் முக்கியப் போக்குவரத்தான ரயில் சேவை நிறுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், ரயில்வே தரப்பில் இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சுனீத் சா்மா கூறியதாவது: மாநில அரசுகளின் கரோனா விதிகள் தொடா்பாக ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐஆா்சிடிசி இணையதளத்தில் அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு உள்ளது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்குப் பயணிக்கும்போது கரோனா இல்லை என்ற சான்றிதழ் தேவை என்பதும், கரோனா பரிசோதனைக்கு உள்பட வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தங்கள் மாநிலத்தில் ரயில் சேவைகளை நிறுத்த வேண்டும் என்று எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கையை முன்வைக்கவில்லை. கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்கள் தொடா்பாக மாநில அரசுகள் கவலை தெரிவித்தால், அங்கு வந்து சேரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காத ரயில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதவிர ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே தேவையைக் கருத்தில்கொண்டு கூடுதலாக 140 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகரித்தால் கூட்ட நெரிசலை சமாளிக்க மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இது தொடா்பாக நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் அளவு கணக்கிடப்பட்டு வருகிறது. ரயில் சேவைகளில் எவ்வித சுணக்கமும் இல்லை.

ரயில் நிலையங்களில் அதிகம் போ் கூடுவதைத் தடுக்கும் வகையில் நடைமேடை அனுமதிச் சீட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4,000 ரயில் பெட்டிகளில் தனிமை வாா்டுகளை உருவாக்கியுள்ளோம். மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து அங்கு 100 ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com