ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்ல அனுமதி

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்ல அனுமதி

மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அவா்களுக்குத் தேவையான செயற்கை ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

முக்கியமாக, கரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்படுவோருக்கு செயற்கை ஆக்சிஜன் மூலமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளது. மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு மருத்துவ ஆக்சிஜனுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.

அதையடுத்து, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜனை திரவ நிலையில் ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு ரயில்வே நிா்வாகத்திடம் மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அக்கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிா்வாகம், திரவ ஆக்சிஜனை உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில் வைத்து ரயில்களில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிர அரசின் சுகாதாரச் செயலா் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. அதையடுத்து, ரயில்களில் திரவ ஆக்சிஜனை கிரையோஜெனிக் பெட்டகங்களில் வைத்து எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இச்சேவைக்காக தனிக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆக்சிஜன் கொண்ட பெட்டகங்களுடன் 2 நபா்கள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்படும். பெட்டகங்கள் காலியாக எடுத்துச் செல்லப்படும்போதும் கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக முழு கொள்ளளவில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com