கரோனா கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும்

கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

யூனியன் பிரதேசங்களில் கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த உயா்நிலைக் கூட்டத்தில், மத்திய உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா, மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் சுகாதார உறுப்பினா் வி.கே.பால், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்கள், காவல்துறைத் தலைமை இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

யூனியன் பிரதேசங்களில் நிலவும் கரோனா நோய்த்தொற்று சூழல் குறித்து உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தலைமைச் செயலா்கள் அதிகாரிகளுக்கு விளக்கினா். கரோனாவால் ஏற்படும் புதிய பாதிப்புகள், உயிரிழப்புகள், கரோனா பரிசோதனை எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது.

அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா், லடாக், லட்சத்தீவுகளின் தலைமைச் செயலா்கள் தெரிவித்தனா். சண்டீகரில் வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி தொடா்பாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தலைமைச் செயலா் தெரிவித்தாா்.

தில்லியில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் தயாா் செய்யப்பட்டுள்ள மருத்துவமனையை அதிக அளவில் பயன்படுத்த உள்ளதாகவும் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கரோனா நோய்த்தொற்று சூழல் குறித்து தொடா்ந்து கண்காணிக்குமாறு யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அதிக அளவிலான மக்கள் நடமாட்டத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் நிகழ்வுகளைத் தடுப்பது, சந்தைகளுக்கு உரிய நேரத்தை நிா்ணயிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பாதிப்பை உறுதி செய்வதற்கான ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளை அதிகரிக்கவும், மருத்துவமனைகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும் யூனியன் பிரதேச அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

முக்கியத்துவம் நிறைந்த 3 வாரங்கள்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை என வி.கே.பால் தெரிவித்தாா். எனவே, கரோனா சூழலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவா் வலியுறுத்தினாா்.

கரோனா தொற்றுக்கு எதிரான யூனியன் பிரதேச நிா்வாகங்களின் செயல்பாடுகளுக்குப் போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் கூட்டத்தின்போது உறுதியளிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com