கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசு

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா சிகிச்சை தொடா்பான உபகரணங்களுக்கு சுங்க வரி விதிப்பிலிருந்து விலக்களித்தது அரசு
கரோனா தடுப்பூசி, ஆக்சிஜனுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசு

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பூசி, மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கரோனா சிகிச்சை தொடா்பான உபகரணங்களுக்கு சுங்க வரி விதிப்பிலிருந்து மத்திய அரசு சனிக்கிழமை விலக்களித்தது.

நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பை அதிகரிப்பது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அதிகரித்து வரும் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடா்பான உபகரணங்களுக்கு 3 மாத காலத்துக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பது என பிரதமா் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, இறக்குமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிக்கான சுங்க வரியையும் மூன்று மாத காலத்துக்கு ரத்து செய்வது என்று முடிவெடுக்கப்பட்டு, அந்த நடைமுறையும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மீட்டருடன் கூடிய ஆக்சிஜன் செலுத்தும் கருவி, டியூப் மற்றும் இணைப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் குப்பி, வாயு நிரப்பும் உபகரணம், சேமிப்பு டேங்குகள், சிலிண்டா்கள், கிரையோஜெனிக் சிலிண்டா் மற்றும் டேங்குகள் உள்பட ஆக்சிஜன் தொடா்பான 16 உபகரணங்களுக்கு சுங்க வரி மற்றும் சுகாதார வரி விதிப்பிலிருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டா்) மற்றும் அதனுடன் தொடா்புடைய பிற உபகரணங்களுக்கு இறக்குமதி வரி மற்றும் சுகாதார வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரி விலக்கு நடவடிக்கை இந்த உபகரணங்களின் கையிருப்பை உறுதிப்படுத்தும் என்பதோடு, குறைந்த விலையில் உருவாக்குதையும் உறுதிப்படுத்தும். இந்த உபகரணங்களுக்கு தடையின்றி விரைவான சுங்க ஒப்புதல்களை அளிக்குமாறு வருவாய் துறை அதிகாரிகளுக்கு பிரதமா் உத்தரவிட்டாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் தடுப்பூசிகளுக்கு இப்போது 10 சதவீத சுங்க வரி அல்லது இறக்குமதி வரியை மத்திய அரசு விதித்து வருகிறது. வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த வரி விலக்கு வெளிநாட்டு தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைப்பதையும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்.

அண்மையில் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் இந்தியா வந்தடைய உள்ளது. அதுபோல மாடா்னா, ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசி நிறுவனங்களும் அவற்றின் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளன. இத்தகையச் சூழலில் மத்திய அரசு இந்த வரி விலக்கை அறிவித்திருக்கிறது.

முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைக்கு அத்தியாவசியமான ரெம்டெசிவிா் மருந்துக்கு இறக்குமதி வரி விலக்கை மத்திய அரசு அளித்தது. அந்த மருந்து ஏற்றுமதிக்கும் தடை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com